ரூ. 770 கோடி செலவில் அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டம் – ஜனாதிபதி நேரில் ஆய்வு!
அனுராதபுர புனித நகர அபிவிருத்தித் திட்டத்தின் முன்னேற்றங்கள் மற்றும் முன்மொழியப்பட்ட அபிவிருத்திப் பணிகளை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க ஒக்டோபர் 23ஆம் திகதி நேரில் சென்று ஆய்வு செய்தார்.
சுமார் 7.7 பில்லியன் ரூபா செலவில் முன்னெடுக்கப்படவுள்ள இந்தத் திட்டத்திற்கு இந்திய அரசாங்கத்தின் நிதியுதவி கிடைக்கவுள்ளது. அனுராதபுரத்தின் வரலாற்று, தொல்பொருள் மற்றும் மத முக்கியத்துவத்தைப் பாதுகாத்து, அப்பகுதியின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவதே இத்திட்டத்தின் முக்கிய நோக்கமாகும்.
இதன் கீழ் அணுகல் வீதிகளை அபிவிருத்தி செய்தல், வழிபாட்டாளர்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளுக்கான வசதிகளை மேம்படுத்துதல், கழிவு முகாமைத்துவத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளன.
தனது விஜயத்தின்போது, வரலாற்றுச் சிறப்புமிக்க மூன்று குளங்களுக்கு அருகிலுள்ள வீதி அபிவிருத்திப் பணிகள், மேற்கு மடாலய வளாகத்தில் இடம்பெறும் தொல்பொருள் அகழ்வாராய்ச்சிப் பணிகள் மற்றும் ருவன்வெலிசாயவுக்கு அருகில் முன்மொழியப்பட்டுள்ள வாகனத் தரிப்பிடத் திட்டம் ஆகியவற்றை ஜனாதிபதி பார்வையிட்டார்.
அபிவிருத்திப் பணிகளைத் துரிதப்படுத்துவதுடன், புனிதப் பிரதேசத்தின் தொன்மை, வரலாற்று மரபுரிமை மற்றும் மதப் பெறுமதிகள் எவ்விதத்திலும் பாதிக்கப்படாத வகையில் திட்டத்தை முன்னெடுக்குமாறு ஜனாதிபதி அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார்.
மேலும், திட்டத்தை நடைமுறைப்படுத்தும்போது எதிர்கொள்ளப்படும் பிரச்சினைகளுக்குத் தொடர்புடைய தரப்பினருடன் கலந்தாலோசித்து உரிய தீர்வுகளைப் பெற்றுக்கொள்ளுமாறும் அவர் அதிகாரிகளிடம் வலியுறுத்தினார்.