10 ஆண்டுகளுக்குப் பின்னர் இலங்கைக்கு மீண்டும் விமான சேவையை ஆரம்பித்த பிரிட்டிஷ் எயார்வேஸ்!
பத்து ஆண்டுகளுக்குப் பின்னர் பிரிட்டிஷ் எயார்வேஸ் (British Airways) விமான நிறுவனம் இலங்கைக்கான தனது விமான சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.
இதன் முதலாவது விமானம், ஒக்டோபர் 24ஆம் திகதி சனிக்கிழமை காலை கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்தது.
லண்டன் கேட்விக் விமான நிலையத்திலிருந்து (London Gatwick Airport) BA2045 என்ற விமான இலக்கத்துடன் பயணித்த போயிங் 777-200ER ரக விமானமே இவ்வாறு கொழும்பை வந்தடைந்துள்ளது.
இந்த விமான சேவையின் மீள ஆரம்பத்தின் மூலம் இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான விமானப் போக்குவரத்துத் தொடர்புகள் மேலும் வலுப்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன்படி, லண்டன் கேட்விக் மற்றும் கொழும்பு இடையே வாரத்திற்கு மூன்று விமான சேவைகளை முன்னெடுக்க பிரிட்டிஷ் எயார்வேஸ் திட்டமிட்டுள்ளது.
இலங்கையின் முக்கிய சுற்றுலாப் பயணச் சந்தைகளில் ஒன்றாக ஐக்கிய இராச்சியம் விளங்குவதால், இந்த விமான சேவையின் மீள ஆரம்பம் நாட்டின் சுற்றுலாத்துறைக்கு ஊக்கமளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும், இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தகம், சுற்றுலா, வணிகப் பயணங்கள் மற்றும் மக்களுக்கிடையிலான தொடர்புகளை மேம்படுத்தவும் இந்தச் சேவை உதவும் எனக் கருதப்படுகிறது.
இலங்கையின் ஹேலிஸ் குழுமத்தின் (Hayleys Group) துணை நிறுவனமான அட்வான்டிஸ் ஏவியேஷன் சர்வீசஸ் (Advantis Aviation Services), இலங்கையில் பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் பொது விற்பனை முகவராகச் (GSA) செயற்படவுள்ளது.
பிரிட்டிஷ் எயார்வேஸ் நிறுவனத்தின் தகவல்களின்படி, கொழும்புக்கான இந்த விமான சேவை குளிர்கால விமான அட்டவணையின் கீழ் பருவகால சேவையாக முன்னெடுக்கப்படும்.
இந்தச் சேவையில் பயணிகளுக்காக பொருளாதார வகுப்பு (Economy Class), பிரீமியம் பொருளாதார வகுப்பு (Premium Economy) மற்றும் வணிக வகுப்பு (Business Class) ஆகிய பயண வசதிகள் வழங்கப்படவுள்ளன.