நடிகர் சரத்குமாரின் 177ஆவது திரைப்படம் ‘டாக்ஸி’ – தலைப்பு அதிகாரப்பூர்வமாக வெளியீடு!
தமிழ் திரையுலகின் மூத்த நடிகரும், ‘சுப்ரீம் ஸ்டார்’ என ரசிகர்களால் அழைக்கப்படுபவருமான சரத்குமார் நடிக்கும் 177ஆவது திரைப்படத்திற்கு ‘டாக்ஸி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.
‘வானம் கொட்டட்டும்’ திரைப்படத்தின் மூலம் கவனம் ஈர்த்த இயக்குநர் தனா இப்படத்தை இயக்குகிறார். மலேசியாவின் முன்னணி நிறுவனமான பெர்ஜெயா குழுமமும், நடிகை ராதிகா சரத்குமாரின் ரேடான் மீடியாவொர்க்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனமும் இணைந்து இப்படத்தைப் பிரம்மாண்டமாகத் தயாரிக்கின்றன.
திரையுலகில் 30 ஆண்டுகளுக்கும் மேலாகத் தனக்கெனத் தனி இடத்தைப் பிடித்துள்ள சரத்குமார், இப்படத்தில் அதிரடி ஆக்ஷன் நிறைந்த கதாபாத்திரத்தில் நடிக்கவுள்ளார். முழுநீள ஆக்ஷன் என்டர்டெய்னராக உருவாகும் இப்படத்தில் முன்னணி தொழில்நுட்பக் கலைஞர்கள் பலர் இணைந்துள்ளனர்.
இதன்படி, இயக்குநர் தனா இயக்கும் இப்படத்திற்கு பிரபல எழுத்தாளர் ஜெயமோகன் கதை மற்றும் திரைக்கதைப் பங்களிப்பை வழங்குகிறார். ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார்.
இப்படத்தின் தலைப்பு வெளியீடு மற்றும் அறிமுக விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த நிகழ்வில் தயாரிப்பாளர் ராதிகா சரத்குமார், பெர்ஜெயா குழுமத்தின் நிறுவனர் டான் ஸ்ரீ வின்சென்ட் டான் மற்றும் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட பிரபல இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்டோர் படக்குழுவினருக்கு வாழ்த்துத் தெரிவித்தனர்.
இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், படத்தில் நடிக்கவுள்ள ஏனைய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள் குறித்த அறிவிப்புகள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.