தேசிய பாதுகாப்பைக் காரணம் காட்டி AI உள்ளிட்ட 40 தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடு விதிக்க சீனா திட்டம்!
செயற்கை நுண்ணறிவு (AI), சிப் தொழில்நுட்பம் மற்றும் சூரிய மின்சக்தி உள்ளிட்ட 40 தொழில்நுட்பங்களின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகளை விதிக்கவும், சில தொழில்நுட்பங்களின் ஏற்றுமதியைத் தடை செய்யவும் சீனா திட்டமிட்டுள்ளது.
அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் தொழில்நுட்பப் போட்டி தீவிரமடைந்து வரும் நிலையில், தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாக சீன அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சீனாவின் வர்த்தக அமைச்சும் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப அமைச்சும் இணைந்து, ஏற்றுமதித் தடை மற்றும் கட்டுப்பாடுகளுக்கு உட்படுத்தப்படும் தொழில்நுட்பங்களின் பட்டியலில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான வரைவு ஆவணத்தை வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ளன.
இந்த நடவடிக்கை அவசியமானது எனத் தெரிவித்துள்ள சீன வர்த்தக அமைச்சின் பேச்சாளர், தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட காரணங்களை இதற்கான அடிப்படையாகக் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவும் அமெரிக்காவும் செயற்கை நுண்ணறிவின் பாதுகாப்பு மற்றும் நிர்வாகம் தொடர்பான பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் கண்டுவரும் நிலையில், இந்த முன்மொழிவு வெளியாகியுள்ளது. தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக்கூடிய AI சம்பவங்கள் தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையில் தகவல் அறிவிக்கும் பொறிமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் இரு தரப்பும் கலந்துரையாடி வருகின்றன.
AI தொழில்நுட்பங்களுக்கு முக்கிய கட்டுப்பாடுகள்
சீன அமைச்சுகள் வெளியிட்டுள்ள முன்மொழியப்பட்ட பட்டியலில், மேம்பட்ட பெரிய மொழி மாதிரிகள் (Large Language Models) மற்றும் AI முகவர்கள் (AI Agents) உள்ளிட்ட 23 செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பங்கள் இடம்பெற்றுள்ளன.
முக்கியமான தேசியத் தரவுகளைப் பயன்படுத்திப் பயிற்றுவிக்கப்பட்ட பெரிய AI மாதிரிகளின் அடிப்படைத் தொழில்நுட்பங்களை ஏற்றுமதி செய்வதற்குத் தடை விதிக்கவும் முன்மொழியப்பட்டுள்ளது.
அத்துடன், தேசியப் பாதுகாப்பு மற்றும் முக்கியமான தகவல் உட்கட்டமைப்புகள் போன்ற மிகுந்த உணர்திறன் கொண்ட துறைகளில் பயன்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட AI முகவர்களின் ஏற்றுமதிக்கும் கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளன.
இது தொடர்பாக சீன வர்த்தக அமைச்சு வெளியிட்ட அறிக்கையில், AI தொழில்நுட்பங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் துஷ்பிரயோகம் செய்யப்படுவதையும் தடுப்பதுடன், அவை மனிதக் கட்டுப்பாட்டின் கீழ் இருப்பதை உறுதிப்படுத்துவதும் இந்த நடவடிக்கையின் நோக்கங்களில் அடங்குவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இரண்டு டிரில்லியன் அல்லது அதற்கும் அதிகமான அளவுருக்களைக் (Parameters) கொண்ட AI மாதிரிகள் மற்றும் உலகளவில் முன்னணித் திறன்களைக் கொண்ட சில மாதிரிகளின் ஏற்றுமதிக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்படலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
AI மாதிரியின் அளவுருக்களின் எண்ணிக்கை என்பது, அதன் கற்றல் திறனை மதிப்பிடுவதற்குப் பயன்படுத்தப்படும் முக்கியமான அளவீடுகளில் ஒன்றாகும்.
சீனாவின் Moonshot நிறுவனத்தின் Kimi K3 மற்றும் Alibaba நிறுவனத்தின் Qwen 3.8-Max உள்ளிட்ட AI மாதிரிகள் இரண்டு டிரில்லியனுக்கும் அதிகமான அளவுருக்களைக் கொண்டவையாகக் குறிப்பிடப்படுகின்றன. எனினும், வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட முன்மொழிவில் குறிப்பிட்ட AI மாதிரிகளின் பெயர்கள் இடம்பெறவில்லை.
சிப், சூரிய மின்சக்தி மற்றும் உயிரித் தொழில்நுட்பங்களுக்கும் கட்டுப்பாடு
AI செயலாக்கச் சில்லுகள் மற்றும் நினைவகச் சில்லுகள் (Memory Chips) தயாரிப்புடன் தொடர்புடைய சில தொழில்நுட்பங்கள் உட்பட, பல சிப் வடிவமைப்புத் தொழில்நுட்பங்களும் முன்மொழியப்பட்ட ஏற்றுமதிக் கட்டுப்பாட்டுப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன.
சூரிய மின்சக்தித் துறையுடன் தொடர்புடைய 12 தொழில்நுட்பங்களும் இதில் இடம்பெற்றுள்ளன. சூரிய மின்கல உற்பத்திச் சங்கிலியில் முக்கிய மூலப்பொருளாக விளங்கும் பொலிசிலிக்கான் (Polysilicon) தயாரிப்புடன் தொடர்புடைய தொழில்நுட்பங்களும் அவற்றில் அடங்குகின்றன.
மேலும், உயிரணு சிகிச்சை மற்றும் மரபணுச் சிகிச்சை தொடர்பான தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட ஐந்து உயிரி மருத்துவத் தொழில்நுட்பங்களுக்கும் கட்டுப்பாடுகள் விதிக்க முன்மொழியப்பட்டுள்ளது.
மேற்கத்திய நாடுகளுக்குப் பதிலடி எனக் கருத்து
சீனாவின் இந்த நடவடிக்கையானது, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ் மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட முக்கிய தொழில்நுட்பங்களில் மேற்கத்திய நாடுகள் தமது இறையாண்மை சார்ந்த தேவைகளையும் கட்டுப்பாடுகளையும் வலியுறுத்தி வருவதற்கான பதிலாகக் கருதப்படலாம் என தொழில்நுட்ப ஆய்வு மற்றும் ஆலோசனை நிறுவனமான Omdia-வின் தலைமை ஆய்வாளர் லியான் ஜே சு தெரிவித்துள்ளார்.
சீனத் தொழில்நுட்பங்களை அணுகுவதையும் அவற்றைப் பயன்படுத்துவதையும் மேலும் முறையாகக் கட்டுப்படுத்துவதே இதன் நோக்கமாக இருக்கலாம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில ஆண்டுகளாக, அமெரிக்கா தலைமையிலான கட்டுப்பாடுகள் காரணமாக, உலகின் அதிநவீன AI சில்லுகள் மற்றும் மேம்பட்ட சிப் தயாரிப்பு இயந்திரங்களைப் பெறுவதில் சீனா பல்வேறு தடைகளை எதிர்கொண்டுள்ளது.
இதேவேளை, அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் கடந்த ஜூன் மாதம், தேசிய பாதுகாப்புக் காரணங்களைக் குறிப்பிட்டு, தனது சக்திவாய்ந்த AI மாதிரிகளான Fable 5 மற்றும் Mythos 5 ஆகியவற்றில் சிலவற்றை வெளிநாட்டுப் பிரஜைகள் பயன்படுத்துவதைத் தடுக்குமாறு Anthropic நிறுவனத்திடம் கோரியிருந்தது. பின்னர் அந்தக் கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டன.
தீவிரமடையும் உலகளாவிய தொழில்நுட்பப் போட்டி
சீனாவுக்கும் அமெரிக்காவுக்கும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறிவருவதாக பிரான்ஸின் Natixis வங்கியின் மூத்த பொருளாதார நிபுணர் கேரி ங் தெரிவித்துள்ளார்.
உலகளாவிய வர்த்தகம் மற்றும் முதலீட்டில் மட்டுமன்றி, தொழில்நுட்பங்களை அணுகுவதிலும் நாடுகளுக்கு இடையிலான பிளவு அதிகரித்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில், சீனாவின் புதிய ஏற்றுமதிக் கட்டுப்பாடுகள் நடைமுறைக்கு வந்தால், உலகளாவிய AI மற்றும் சிப் தொழில்நுட்பச் சந்தையில் அவை குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.