தீக்காய அபாயம்: கனடா, அமெரிக்காவில் ஸ்மார்ட் கண்ணாடிகள் உடனடியாகத் திரும்பப் பெறப்பட்டன!
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பத்தில் இயங்கும் ஸ்மார்ட் கண்ணாடிகளைப் (Smart Glasses) பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், தீக்காயப் அபாயம் காரணமாக அவற்றை அணிவதை உடனடியாக நிறுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
இன்மோ (INMO) நிறுவனத்தின் 'ஸ்மார்ட் கிளாஸ் எயர்3' (Smart Glass AIR3) ரகக் கண்ணாடிகளே இவ்வாறு கனடா மற்றும் அமெரிக்காவில் சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன. இக்கண்ணாடிகளை நீண்ட நேரம் பயன்படுத்தும்போது, அவற்றின் இடது பக்கம் அளவுக்கு அதிகமாக வெப்பமடையும் (Overheat) அபாயம் உள்ளதாகக் கனடா சுகாதாரத் திணைக்களம் (Health Canada) எச்சரித்துள்ளது.
"பாதிக்கப்பட்ட தயாரிப்பை நுகர்வோர் உடனடியாகப் பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும். மேலும், அக் கண்ணாடியை மீண்டும் பயன்படுத்துவதற்கு முன்பாக அதன் மென்பொருளை (Firmware) பதிப்பு 3.16 க்கு புதுப்பிக்க (Update) வேண்டும்" என்று அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கண்ணாடியின் வலது பக்கக் கம்பியின் உட்பகுதியில் காணப்படும் 'AIR3' என்ற அடையாளக் குறியீட்டை வைத்து குறிப்பிட்ட இந்த மாதிரியை (Model) அடையாளம் காண முடியும். இந்த வகை ஸ்மார்ட் கண்ணாடிகள் ஊடகங்களை நேரலையாக ஒளிபரப்பவும் (Stream), மொழிபெயர்ப்பு மற்றும் அலுவலகப் பணிகளுக்கு உதவவும் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துகின்றன.
இக்கண்ணாடிகள் அமேசான் (Amazon), கிக்ஸ்டார்ட்டர் (Kickstarter) மற்றும் இன்மோ நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் (inmoxr.com) 900 முதல் 1300 அமெரிக்க டாலர்கள் வரை விற்பனை செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2025 டிசம்பர் முதல் 2026 ஆகஸ்ட் வரையிலான காலப்பகுதியில், கனடாவில் 120 ஜோடி கண்ணாடிகளும், அமெரிக்காவில் 1,643 ஜோடி கண்ணாடிகளும் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக இன்மோ நிறுவனம் தெரிவித்துள்ளது. கனடா சுகாதாரத் திணைக்களம், அமெரிக்க நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்பு ஆணைக்குழு (CPSC) மற்றும் இன்மோ சர்வதேச தொழில்நுட்ப நிறுவனம் ஆகியவை இணைந்து இந்தத் திரும்பப்பெறும் நடவடிக்கையை வெளியிட்டுள்ளன.
செப்டம்பர் 17 ஆம் திகதி வரை கனடாவில் எவ்வித பாதிப்புகளும் பதிவாகவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ள போதிலும், இக்கண்ணாடிகள் அளவுக்கு அதிகமாக வெப்பமடைவது குறித்து 10 முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாகவும், அதில் முகம் மற்றும் இடது காது பகுதியில் எரிச்சல் உணர்வு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் அமெரிக்க அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட தயாரிப்பின் புகைப்படம், கொள்முதல் இலக்கம் மற்றும் வாங்கப்பட்ட வழிமுறை ஆகியவற்றைப் பகிர்ந்து கொள்ளுமாறு இன்மோ நிறுவனம் வாடிக்கையாளர்களைக் கேட்டுக்கொண்டுள்ளது.
இதேவேளை, சந்தையிலிருந்து திரும்பப் பெறப்பட்ட பொருட்களைக் கனடாவில் மீண்டும் விநியோகிப்பதோ, விற்பனை செய்வதோ அல்லது இலவசமாகக் கொடுப்பதோ கூட நுகர்வோர் தயாரிப்பு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ளதாகக் கனடா சுகாதாரத் திணைக்களம் நினைவூட்டியுள்ளது.