இன்ஸ்டாகிராம் பெண்களுக்கான செயலி: எலான் மஸ்க் சர்ச்சைக் கருத்து
இன்ஸ்டாகிராம் (Instagram) செயலியானது பெண்களுக்கானது என உலகின் முன்னணி தொழிலதிபரும் கோடீஸ்வரருமான எலான் மஸ்க் தெரிவித்துள்ள கருத்து, சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தைக் கிளப்பியுள்ளது.
தனது 'எக்ஸ்' (X) சமூக வலைத்தளத்தில் பயனர் ஒருவர், தாம் இன்ஸ்டாகிராம் செயலியை அழித்துவிட்டதாகக் குறிப்பிட்டு, அது பெண்களுக்கு மட்டுமே உகந்தது என்றும் அதனால் எவ்விதப் பயனுமில்லை என்றும் பதிவிட்டிருந்தார். அதற்குப் பதிலளித்த எலான் மஸ்க், "இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது" எனக் குறிப்பிட்டிருந்தார்.
எலான் மஸ்க் இவ்வாறு கருத்து தெரிவிப்பது இது முதல் முறையல்ல. கடந்த மே மாதமும் சமூக வலைத்தளங்களின் பயன்பாடு குறித்த விவாதமொன்றின் போது, இன்ஸ்டாகிராம் பெண்களுக்கானது என அவர் தெரிவித்திருந்தார்.
மெட்டா (Meta) நிறுவனத்தின் கீழ் இயங்கும் இன்ஸ்டாகிராம் செயலியை எலான் மஸ்க் இவ்வாறு விமர்சித்துள்ளமை சமூக வலைத்தள பயனர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.
ட்விட்டர் (Twitter) நிறுவனத்தைக் கைப்பற்றி அதை 'எக்ஸ்' எனப் பெயர் மாற்றம் செய்த எலான் மஸ்க், தொடர்ந்து தனது தளத்தை ஊக்குவித்து வரும் அதேவேளையில், போட்டிச் சமூக வலைத்தளங்களைக் கடுமையாக விமர்சித்தும் வருகிறார்.
குறிப்பாக, ஒளிப்படங்கள் மற்றும் குறுகிய காணொளிகளுக்கான தளமாக விளங்கும் இன்ஸ்டாகிராம், பயனர்கள் மற்றும் விளம்பரதாரர்களை ஈர்ப்பதில் எலான் மஸ்க்கின் எக்ஸ் தளத்திற்குப் பிரதான போட்டியாளராக விளங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.