மண்ணில் விழுந்து தீப்பற்றியது ஸ்பேஸ் எக்ஸ் விண்கலம்: சுற்றுவட்டப்பாதையை அடைந்து புதிய சாதனை!
அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX), உலகின் மிகப்பரிமாணமும் சக்திவாய்ந்ததுமான 'ஸ்டார்ஷிப்' (Starship) விண்கலத்தை முதல்முறையாக வெற்றிகரமாகப் புவியின் சுற்றுவட்டப்பாதையில் (Orbit) செலுத்தி வரலாற்றுச் சாதனை படைத்துள்ளது. இருப்பினும், பாதுகாப்புப் பரிசீலனைகள் காரணமாக இந்த விண்வெளிப் பயணம் திட்டமிட்ட நேரத்திற்கு முன்னதாகவே நிறைவுசெய்யப்பட்டது.
அமெரிக்காவின் டெக்சாஸ் (Texas) மாநிலத்தில் அமைந்துள்ள 'ஸ்டார்பேஸ்' (Starbase) ஏவுதளத்திலிருந்து ஏவப்பட்ட இந்த ராக்கெட், விண்வெளியை அடைந்து மூன்று மணித்தியாலங்களின் பின்னர், பசிபிக் பெருங்கடலில் (Pacific Ocean) ஹவாய் (Hawaii) தீவுகளுக்கு வடக்கே தரையிறக்கப்பட்டது.
ஆரவாரத்திற்கு மத்தியில் சுற்றுவட்டப்பாதையை அடைந்த ஸ்டார்ஷிப்
அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசாவின் (NASA) 'ஆர்டெமிஸ்' (Artemis) நிலவுப் பயணத் திட்டத்திற்குத் தங்களை ஆயத்தப்படுத்தும் நோக்கில், புவியை 6 முறை சுற்றிவந்து 10 மணித்தியாலங்கள் பயணிக்கவே ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
பயணத்தின் தொடக்கத்தில் விண்கலத்தின் எஞ்சின் (Engine) ஒன்று எதிர்பாராதவிதமாகச் செயலிழந்ததால், விண்கலம் சுற்றுவட்டப்பாதையை அடையுமா என்பதில் பெரும் இழுபறி நிலை நீடித்தது. எனினும், எஞ்சிய அமைப்புகள் அனைத்தும் திறம்படச் செயல்பட்டதால், பல நிமிடப் போராட்டத்திற்குப் பின் விண்கலம் வெற்றிகரமாகப் புவியின் சுற்றுவட்டப்பாதையை அடைந்ததாகக் கட்டுப்பாட்டு மையம் அறிவித்தது.
இப்பயணத்தின் போது, ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் அதிநவீன 'ஸ்டார்லிங்' (Starlink) இணையச் சேவைக்கான 26 செயற்கைக்கோள்கள் விண்வெளியில் வெற்றிகரமாக நிலைநிறுத்தப்பட்டன.
பாதுகாப்புப் கருதி முன்னதாகவே முடித்துக் கொள்ளப்பட்ட பயணம்
மணிக்கு 28,000 கிலோமீற்றர் வேகத்தில் 275 கிலோமீற்றர் உயரத்தில் புவியைச் சுற்றிவந்த போதிலும், பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாகத் திட்டமிட்ட நேரத்திற்குச் சில மணித்தியாலங்களுக்கு முன்னதாகவே விண்கலத்தைத் திரும்பப் பெறக் கட்டுப்பாட்டாளர்கள் தீர்மானித்தனர்.
பசிபிக் பெருங்கடலில் தரையிறங்கிய சில கணங்களிலேயே ஸ்டார்ஷிப் விண்கலம் தலைகீழாகச் சாய்ந்து தீப்பற்றி எரிந்தது. 124 மீற்றர் உயரமுடைய இந்த ராக்கெட் முழுமையாக மீண்டும் பயன்படுத்தக்கூடிய வகையில் (Reusable) வடிவமைக்கப்பட்டுள்ளது.
ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் இந்தச் சாதனைக்கு நாசா நிர்வாகி ஜாரெட் ஐசக்மேன் தனது வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார். விண்வெளிப் பயணத்தின் பாதுகாப்பையும் பொறுப்பையும் உறுதிசெய்து மேற்கொள்ளப்பட்ட இந்த முயற்சி ஊக்கமளிப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.