பாதுகாப்புக் கவலைகளைத் தவிர்த்து புதிய செயற்கை நுண்ணறிவு முகவரை அறிமுகப்படுத்தியது ஒபன்ஏஐ!
ஒபன்ஏஐ (OpenAI) நிறுவனத்தின் ஆண்டாந்த தொழில்நுட்ப மாநாட்டில், “டாட்ஸ்” (Dots) என்ற பெயரிலான புதிய செயற்கை நுண்ணறிவு (AI) முகவரை (Agent) அதன் தலைமை நிர்வாக அதிகாரி சாம் ஆல்ட்மேன் (Sam Altman) அறிமுகப்படுத்தியுள்ளார். எனினும், நிறுவனத்தின் அதிநவீன மாதிரிகள் தொடர்பில் எழுந்துள்ள பாதுகாப்பு கவலைகள் குறித்து அவர் எந்தவொரு கருத்துக்களையும் தெரிவிக்காது தவிர்த்துள்ளார்.
பயனர்களின் அன்றாடப் பணிகளைத் தாமாகவே முன்னின்று செய்துமுடுக்கும் திறன்கொண்ட இந்த 'டாட்ஸ்' செயற்கை நுண்ணறிவு முகவர், மிகவும் ஆற்றல்மிக்கது என சாம் ஆல்ட்மேன் குறிப்பிட்டுள்ளார். கடந்த வாரம் மெட்டா (Meta) நிறுவனம் அறிமுகப்படுத்தி பெரும் வரவேற்பைப் பெற்ற 'மியூஸ்' (Muse) முகவருக்குப் போட்டியாகவே இது களமிறக்கப்பட்டுள்ளது. "நாம் திரைப்படங்களில் கண்டு வியந்ததைப் போல, பயனர்களுக்கு எப்போதும் உறுதுணையாக இருக்கும் ஒரு செயலி உதவியாளராக இது செயல்படும்" என ஆல்ட்மேன் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் விரைவான வளர்ச்சிக்கு ஏற்ப பாதுகாப்பு வழிமுறைகள் வலுப்படுத்தப்பட வேண்டும் என வல்லுநர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இதன் பின்னணியில், பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் காரணமாகத் தமது புதிய மாதிரி ஒன்றின் வெளியீட்டைத் பிற்போட்டுள்ளதாக ஒபன்ஏஐ நிறுவனம் கடந்த திங்கள்கிழமை அறிவித்திருந்தது. இருப்பினும், இந்த விவகாரம் குறித்து மாநாட்டில் உரையாற்றிய ஆல்ட்மேன் எதனையும் குறிப்பிடவில்லை.
அதேநேரம், செயற்கை நுண்ணறிவுப் புரட்சியை ஒரு தொழிற்புரட்சியாகப் பார்க்காமல், மறுமலர்ச்சிக் காலமாகவே கருத வேண்டும் எனத் தெரிவித்த அவர், மனிதர்களை இயந்திரங்களின் உதிரிப்பாகங்களாக மாற்றுவது இதன் நோக்கமல்ல என்றும், மக்களின் ஆற்றலையும் படைப்பாற்றலையும் அதிகரிப்பதே இதன் பிரதான இலக்கு என்றும் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இந்நிகழ்வில் 'ஜிபிடி-6.1 சோல்' (GPT-6.1 Sol) எனும் மேம்படுத்தப்பட்ட மாதிரி மற்றும் 'அல்ட்ராஃபாஸ்ட்' (Ultrafast) எனும் அதிவேகச் சேவை உள்ளிட்ட பல புதிய புதுப்பிப்புகளையும் ஒபன்ஏஐ நிறுவனம் முறைப்படி அறிவித்தது.
மற்றொருபுறம், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தொழில்நுட்பத் துறைத் தலைவர்களுடன் வெள்ளை மாளிகையில் நடத்திய உயர்மட்டச் சந்திப்பில், ஒபன்ஏஐ நிறுவனத்தின் தலைவர் கிரெக் புரோக்மேன், அமேசானின் ஜெஃப் பெசோஸ்,என்விடியாவின் ஜென்சன் ஹுவாங்,எலான் மாஸ்க் மற்றும் மைக்ரோசாப்டின் சத்யா நாதெள்ளா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.