சாட்ஜிபிடியுடன் இணைந்து செயலாற்றவுள்ளதாக சச்சின் டெண்டுல்கர் அறிவிப்பு
செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்ப நிறுவனமான ஓபன்ஏஐ (OpenAI) இன் சாட்ஜிபிடி (ChatGPT) தளத்துடன் இணைந்து பணியாற்றவுள்ளதாக இந்தியக் கிரிக்கெட் அணியின் முன்னாள் நட்சத்திர வீரர் சச்சின் டெண்டுல்கர் அறிவித்துள்ளார்.
தான் சாட்ஜிபிடி தளத்தை எவ்வாறு பயன்படுத்துகிறேன் என்பது குறித்து ஆராயவும், அதில் தனக்குப் பயனுள்ளதாக அமையும் விடயங்களைப் பொதுமக்களுடன் பகிர்ந்து கொள்ளவும் திட்டமிட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ள சச்சின் டெண்டுல்கர், சாட்ஜிபிடி தனது தேடலார்வத்தை அதிகரித்துள்ளதாகவும், குடும்பத்துடன் சுற்றுலா செல்வதற்கான திட்டங்களை வகுப்பது போன்ற அன்றாடச் செயற்பாடுகளுக்கு அது பெரிதும் உதவியாக இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
"சாட்ஜிபிடி தளம் மூலம் வேறு என்னவெல்லாம் செய்ய முடியும் என்பதைக் கண்டறியவும், எனக்குப் பயனுள்ள விடயங்களைப் பகிர்ந்து கொள்ளவும் ஆவலாக உள்ளேன். மக்கள் தங்களுக்குப் பிடித்தமான துறைகளில் இதைப் பயன்படுத்திப் பார்க்க வேண்டும் என்பதே எனது விருப்பம்" என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தக் கூட்டாண்மை (Partnership) மூலம் சில சுவாரசியமான திட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாகத் தெரிவித்த சச்சின் டெண்டுல்கர், அது தொடர்பான மேலதிக விவரங்கள் எதையும் உடனடியாக வெளியிடவில்லை.