தென் கொரியாவில் விபத்து – உயிரிழந்த இரு இலங்கைத் தொழிலாளர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவர நடவடிக்கை!
தென் கொரியாவின் ஹ்வாசோங் (Hwaseong) பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில் உயிரிழந்த இரண்டு இலங்கைப் புலம்பெயர் தொழிலாளர்களின் சடலங்களை நாட்டுக்கு கொண்டுவருவதற்கான நடவடிக்கைகளை வெளிவிவகார அமைச்சு முன்னெடுத்து வருகிறது.
தென் கொரிய அதிகாரிகள் மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து சடலங்களை இலங்கைக்கு கொண்டுவருவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை பதில் அமைச்சர் அருண் ஹேமச்சந்திர தெரிவித்துள்ளார்.
கடந்த நவம்பர் 26ஆம் திகதி இரவு சுமார் 9 மணியளவில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. இதுதொடர்பாக தென் கொரிய பொலிஸார், சியோலில் உள்ள இலங்கைத் தூதரகத்திற்கு நவம்பர் 27ஆம் திகதி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து, சடலங்களை விரைவாக நாட்டுக்கு கொண்டுவருவதற்கான சட்ட மற்றும் நிர்வாக நடைமுறைகளை நிறைவு செய்யும் வகையில், இலங்கைத் தூதரகத்தின் தூதரகப் பிரிவு சம்பந்தப்பட்ட தென் கொரிய அதிகாரிகள், வெளிவிவகார அமைச்சு மற்றும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் இணைந்து செயற்பட்டு வருகிறது.
அத்துடன், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தேவையான தூதரக மற்றும் நலன்புரி உதவிகளையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்துள்ளார்.
உயிரிழந்த இருவரும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் (SLBFE) பதிவு செய்த பின்னரே தென் கொரியாவுக்குத் தொழிலுக்காகச் சென்றவர்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.