தாய், மகனை சட்டவிரோதமாகத் தடுத்து துன்புறுத்தியதாகக் குற்றச்சாட்டு: தேசிய மக்கள் சக்தி பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட ஐவருக்குப் பிணை
முன்னாள் பெண் ஆசிரியர் ஒருவரையும் அவரது மகனான பொறியியலாளரையும் சட்டவிரோதமாகத் தடுத்து வைத்து, உடல் மற்றும் உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட தேசிய மக்கள் சக்தியின் (NPP) கட்டுப்பாட்டிலுள்ள கிரிந்த புஹுல்வெல்ல பிரதேச சபையின் தலைவர் உள்ளிட்ட ஐவரையும் பிணையில் விடுவிக்க மாத்தறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பிரதேச சபைத் தலைவர் உள்ளிட்ட பிரதேச சபை அதிகாரிகள் அடங்கிய ஐவர், ஓய்வுபெற்ற பெண் ஆசிரியரும் அவரது மகனும் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் நேற்று (22) திஹகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
கிரிந்த, வாடிகவத்த வீதியில் மதில் ஒன்றை நிர்மாணித்தமை தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சையே இந்தச் சம்பவத்துக்குக் காரணம் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பிரதேச சபையில் பணியாற்றும் தொழில்நுட்ப அதிகாரி ஒருவர், தனது அயல் காணியில் நிர்மாணித்த மதிலின் ஒரு பகுதி, குறித்த பொறியியலாளர் தனது வீட்டிலிருந்து வாகனத்தை வெளியே எடுத்துச் செல்வதற்குத் தடையாக அமைந்ததாகக் கூறப்படுகிறது. இதனையடுத்து இரு தரப்பினருக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தில் மதில் நிர்மாணத்தின் சட்டபூர்வத் தன்மை குறித்து ஆராயவும், மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிப்பதற்கான அறிக்கையைத் தயாரிக்கவும், ஓய்வுபெற்ற ஆசிரியையையும் அவரது மகனையும் பிரதேச சபை வளாகத்திற்கு வருமாறு தலைவர் அழைத்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.
எனினும், அங்கு சென்ற இருவரும் ஓர் அறைக்குள் தடுத்து வைக்கப்பட்டு, உடல் மற்றும் உள ரீதியான துன்புறுத்தல்களுக்கு உள்ளாக்கப்பட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
இது தொடர்பாக திஹகொட பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டன. சட்ட மற்றும் அரசியல் அதிகாரங்களைத் தவறாகப் பயன்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் ஐவரும் கைது செய்யப்பட்டனர்.
இதனையடுத்து, சந்தேகநபர்கள் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர். இரு தரப்பு சமர்ப்பிப்புகளையும் பரிசீலித்த நீதவான், சந்தேகநபர்கள் ஐவரையும் தனிப்பட்ட பிணையில் விடுவிக்க உத்தரவிட்டார்.