தவெகவின் ஆறு மாத கால ஆட்சி நம்பிக்கை அளிப்பதாக இல்லை – மு.வீரபாண்டியன்
தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) ஆறு மாத கால ஆட்சி நம்பிக்கை அளிப்பதாக இல்லை என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார்.
திருச்சி திருவெறும்பூரில் உள்ள பெல் (BHEL) தொழிற்சாலை வளாகத்தில் இன்று (13) செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசிய அவர், பெல் நிறுவனத்தில் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதும், ஒப்பந்த அடிப்படையிலான பணியமர்த்தல் முறையைத் தொடர்ந்து நடைமுறைப்படுத்துவதும் முறையல்ல எனக் குறிப்பிட்டார்.
பல ஆயிரக்கணக்கானோருக்கு வாழ்வாதாரம் வழங்கும் பெல் தொழிற்சாலையைப் பாதுகாப்பதுடன், அங்கு பணியாற்றும் தொழிலாளர்களின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
தமிழகத்தில் காலியாக உள்ள ஐந்து தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து கட்சியின் உயர்மட்டக் குழு கூடி முடிவெடுக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.
மேலும், தமது கட்சியின் அரசியல் பிரதான எதிரிகள் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜ.க. ஆகியவையே எனக் குறிப்பிட்ட அவர், அவற்றைத் தோற்கடிப்பதற்கான அரசியல் வியூகங்களையே தமது கட்சி முன்னெடுக்கும் என்றார்.
தவெகவின் ஆறு மாத கால ஆட்சி நம்பிக்கை அளிப்பதாக இல்லை என விமர்சித்த அவர், மக்கள் வழங்கிய தீர்ப்புக்கு மதிப்பளிக்கவும், ஆளுநர் அதிகாரத்தைக் கைப்பற்றும் சூழல் ஏற்படக்கூடாது என்பதற்காகவுமே தாங்கள் ஆதரவு வழங்கியதாகக் கூறினார்.
அத்துடன், 13 கோடி வாக்காளர்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக முதலமைச்சர் இதுவரை கண்டனம் தெரிவிக்காதது அதிர்ச்சியளிப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
திரைப்படத்தில் ஒரு வாக்குக்காகப் போராடியவர், 13 கோடி பேரின் வாக்குரிமை பறிக்கப்பட்டதாகக் கூறப்படும் விவகாரத்தில் ஏன் கண்டனம் தெரிவிக்க மறுக்கிறார் என்றும் முதலமைச்சரை நோக்கி மு.வீரபாண்டியன் கேள்வி எழுப்பினார்.