டெல்லியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து – இருவர் உயிரிழப்பு; பலரைத் தேடும் பணி தீவிரம்
இந்தியாவின் தலைநகர் டெல்லியில் மூன்று மாடிக் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்ததில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், பலர் இடிபாடுகளுக்குள் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.
பழைய டெல்லியின் கலி சத்தாரா பகுதியில் இன்று (நவம்பர் 5) காலை இந்த அனர்த்தம் இடம்பெற்றுள்ளது.
கட்டிடம் இடிந்து விழுந்ததைத் தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்த மீட்புக் குழுவினர் இடிபாடுகளுக்குள் சிக்கியவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட இருவரின் உயிரிழப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளதுடன், மேலும் ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக டெல்லி தீயணைப்புத் துறை அதிகாரி ஒருவர் தெரிவிக்கையில், கட்டிடம் இடிந்து விழுந்தமை தொடர்பான தகவல் இன்று காலை 9.50 மணியளவில் கிடைத்ததாகக் குறிப்பிட்டார்.
தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்தைச் சென்றடைவதற்கு முன்னரே அப்பகுதி மக்கள் நான்கு பேரை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதனையடுத்து, மீட்பு வாகனங்கள் உள்ளிட்ட ஆறு தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
கட்டிடம் இடிந்து விழுந்தபோது அங்கு சுமார் 15 கட்டுமானத் தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டிருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக மத்திய மண்டல துணைப் பொலிஸ் ஆணையர் ரோஹித் ராஜ்பிர் சிங் தெரிவிக்கையில், இதுவரை ஆறு முதல் ஏழு தொழிலாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், அவர்களில் நான்கு பேர் காயமின்றி உயிர் தப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
மேலும், இடிபாடுகளில் இருந்து மீட்கப்பட்ட மூவரில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றையவர் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர் தெரிவித்தார்.
முதற்கட்ட விசாரணைகளின்படி, குறித்த இடத்தில் கடந்த ஒன்றரை மாதங்களாக மூன்று மாடிக் கட்டிடம் அமைக்கும் கட்டுமானப் பணிகள் இடம்பெற்று வந்துள்ளன. கட்டிடத்தின் எடையைத் தாங்கும் வகையில் அமைக்கப்பட்ட தூண்களின் உறுதித்தன்மை போதாமையே கட்டிடம் இடிந்து விழுவதற்குக் காரணமாக இருக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், கட்டிடம் இடிந்து விழுந்தபோது எவ்வித பெரிய சத்தமும் கேட்கவில்லை என்றும், கட்டிடம் திடீரென உள்வாங்கி சரிந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
தொடர்ந்தும் மீட்புப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதுடன், இடிபாடுகளுக்குள் மேலும் பலர் சிக்கியுள்ளனரா என்பது குறித்து அதிகாரிகள் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.