“தவறு செய்தவர்களை நீக்கத் துணிவில்லாத விஜய் எப்படி தூய சக்தியாக இருக்க முடியும்?” – சீமான் கேள்வி
தவறு செய்ததாகக் குற்றச்சாட்டுக்கு உள்ளான தமிழக வெற்றிக் கழக (தவெக) சட்டமன்ற உறுப்பினர் மற்றும் துணை சபாநாயகர் ஆகியோரைப் பதவிகளில் இருந்து நீக்குவதற்குக்கூட முதல்வர் விஜய்க்குத் துணிவில்லையா என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.
திருச்சி விமான நிலையத்தில் இன்று (14) செய்தியாளர்களிடம் கருத்துத் தெரிவித்த அவர், தன்னைத் தூய சக்தி எனக் கூறிக்கொள்ளும் முதல்வர் விஜய், குற்றச்சாட்டுகளுக்கு உள்ளானவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கத் தயங்குவது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேகேதாட்டு அணை விவகாரம் குறித்துப் பேசிய சீமான், கர்நாடக முதல்வர் சிவகுமார் தொடர்ந்து மேகேதாட்டுவில் அணை கட்டியே தீருவோம் எனக் கூறி வருவதாகச் சுட்டிக்காட்டினார்.
தமிழகத்துக்குத் தண்ணீர் வழங்க முடியாது எனக் கூறும் காங்கிரஸ் கட்சியின் ஆதரவில்தான் தமிழகத்தில் தவெக ஆட்சி நடைபெறுவதாகக் குறிப்பிட்ட அவர், தமிழகத்தின் நீர் உரிமையைப் பறிக்கும் கட்சியுடன் கூட்டணி வைத்துக்கொண்டு மாநிலத்தின் உரிமைகளை எவ்வாறு பாதுகாக்க முடியும் என்றும் கேள்வி எழுப்பினார்.
மேலும், முதல்வர் விஜய் எதையும் பேசாமல் செயல்களில் காட்டுவார் எனக் கூறப்படுவதாகவும், ஆனால் அவர் இதுவரை அத்தகைய நடவடிக்கை எதனை முன்னெடுத்துள்ளார் என்பதைச் சுட்டிக்காட்ட முடியுமா என்றும் சீமான் கேள்வி எழுப்பினார்.
சிறுமி ஒருவர் காணாமல் போன விவகாரத்தில் இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனக் குற்றஞ்சாட்டிய அவர், சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் மாவட்ட ஆட்சியருக்குக் குறுஞ்செய்தி அனுப்பியதாகக் கூறப்படும் விவகாரத்திலும் முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் வெளியாகி வருவதாகத் தெரிவித்தார்.
புகார் மனு அளிக்க வந்த நபர் மீது துணை சபாநாயகர் தாக்குதல் நடத்தியதாகக் குறிப்பிட்ட சீமான், அந்தப் பொறுப்புக்கு ஏற்ற வகையில் அவர் செயற்படவில்லை என்றும் அவரைப் பதவியிலிருந்து நீக்குவதற்குக்கூட முதல்வர் விஜய்க்குத் துணிவில்லை என்றும் விமர்சித்தார்.
மேலும், பலரைத் தகுதி நீக்கம் செய்யும் சபாநாயகரால் சட்டமன்ற உறுப்பினர் அருள் விக்னேஷைத் தகுதி நீக்கம் செய்ய முடியாதா எனக் கேள்வி எழுப்பிய அவர், அவரைத் தகுதி நீக்கம் செய்து அந்தத் தொகுதியில் மீண்டும் தேர்தலை நடத்தினால் வெற்றிபெற முடியும் என்ற நம்பிக்கை இல்லையா என்றும் சவால் விடுத்தார்.
மக்களைச் சந்திப்பதற்கு ஏன் அஞ்ச வேண்டும் எனக் கேள்வி எழுப்பிய சீமான், தேர்தலில் வெற்றி பெற்றால் மட்டுமே களத்தில் இருப்போம், தோல்வியடைந்தால் வெளியேறிவிடுவோம் என்ற அணுகுமுறை சரியானதல்ல என்றும் தெரிவித்தார்.
தோல்வியடைந்தாலும் தொடர்ந்து மக்களுக்காகக் களத்தில் நிற்பவரே உண்மையான வீரர் எனக் குறிப்பிட்ட அவர், அரசியலில் பெரும்பான்மையைவிட உண்மையும் நேர்மையுமே முக்கியமானவை என்றும் தெரிவித்தார்.