தரமற்ற மருந்து கொள்வனவு வழக்கு: 275 மில்லியன் ரூபாவை செலுத்தத் தவறிய விவகாரத்தில் உச்சநீதிமன்ற நடவடிக்கைக்கு TISL வரவேற்பு
தரமற்ற மருந்து கொள்வனவு விவகாரத்தில் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டிய 275 மில்லியன் ரூபாவை உரிய முறையில் செலுத்தத் தவறியமை தொடர்பில், முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஐந்து முன்னாள் சுகாதாரத்துறை அதிகாரிகளுக்கு எதிராக உச்சநீதிமன்றம் மேற்கொண்ட நடவடிக்கைகளை ட்ரான்ஸ்பரன்சி இன்டர்நேஷனல் ஸ்ரீலங்கா (TISL) வரவேற்றுள்ளது.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கிச் செயற்படுவது சட்டத்தின் ஆட்சியை உறுதிப்படுத்துவதற்கு அத்தியாவசியமானது என அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
நீதிமன்ற அவமதிப்பு தொடர்பான இந்த மனுவை, கடந்த ஒக்டோபர் 12ஆம் திகதி தாக்கல் செய்ததாக TISL தெரிவித்துள்ளது. மருத்துவக் கொள்வனவு விவகாரத்தில் உச்சநீதிமன்றம் ஏற்கெனவே வழங்கிய தீர்ப்பை வேண்டுமென்றே மீறியதாகக் குற்றஞ்சாட்டி இந்த மனு தாக்கல் செய்யப்பட்டது.
கடந்த மார்ச் 27ஆம் திகதி வழங்கப்பட்ட தீர்ப்பில், முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல உள்ளிட்ட ஐந்து பிரதிவாதிகளும் அரசியலமைப்பின் 12(1) உறுப்புரையின் கீழ் உறுதிப்படுத்தப்பட்டுள்ள சட்டத்தின் சமமான பாதுகாப்பைப் பெறுவதற்கான அடிப்படை உரிமையை மீறியுள்ளதாக உச்சநீதிமன்றம் தீர்மானித்திருந்தது.
இதற்கமைய, முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல 75 மில்லியன் ரூபாவையும், ஏனைய நான்கு பிரதிவாதிகளும் தலா 50 மில்லியன் ரூபாவையும் அரசாங்கத்திற்குச் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
கடந்த 26ஆம் திகதி நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது, முன்னாள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் (NMRA) தலைவர் பேராசிரியர் எஸ். டி. ஜயரத்ன, நீதிமன்ற அவமதிப்பு மனு தாக்கல் செய்யப்பட்டதைத் தொடர்ந்து, கடந்த ஒக்டோபர் 22ஆம் திகதி தமக்கான 50 மில்லியன் ரூபாவைச் செலுத்தியுள்ளதாக நீதிமன்றத்தில் அறிவித்தார்.
முன்னாள் அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல, கடந்த ஒக்டோபர் 23ஆம் திகதி 20 மில்லியன் ரூபாவைச் செலுத்தியதுடன், எஞ்சிய 55 மில்லியன் ரூபாவை இரண்டு வாரங்களுக்குள் செலுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
முன்னாள் சுகாதார அமைச்சின் செயலாளர் எஸ். ஜே. எஸ். சந்திரகுப்த, ஒரு வாரத்திற்குள் 5 மில்லியன் ரூபாவையும், எஞ்சிய 45 மில்லியன் ரூபாவை மூன்று மாதங்களுக்குள்ளும் செலுத்துவதாகத் தெரிவித்துள்ளார்.
முன்னாள் தேசிய மருந்துகள் ஒழுங்குபடுத்தல் அதிகாரசபையின் பிரதம நிறைவேற்று அதிகாரி வைத்தியர் விஜித் குணசேகர, இரண்டு வாரங்களுக்குள் 20 மில்லியன் ரூபாவையும், எஞ்சிய 30 மில்லியன் ரூபாவை மூன்று மாதங்களுக்குள்ளும் செலுத்துவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளார்.
மருத்துவ விநியோகப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் வைத்தியர் ஏ. துசித சுதர்ஷன, தமது சேமிப்பிலிருந்து சுமார் 2 மில்லியன் ரூபாவை ஒரு வாரத்திற்குள் செலுத்துவதுடன், எஞ்சிய 48 மில்லியன் ரூபாவை மூன்று மாதங்களுக்குள் செலுத்துவதாக உறுதியளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து, நான்கு பிரதிவாதிகளும் தமக்குரிய நிலுவைப் பணத்தை மூன்று மாதங்களுக்குள் செலுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், குறித்த நால்வருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடைகளை விதித்த நீதிமன்றம், தலா 50 மில்லியன் ரூபா ரொக்கப் பிணையிலும், இரண்டு சரீரப் பிணையாளர்களின் உத்தரவாதத்திலும் அவர்களைப் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டது.
நீதிமன்ற உத்தரவுகளுக்கு இணங்கிச் செயற்படுவது சட்டத்தின் ஆட்சி மற்றும் அரசியலமைப்புப் பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையாகும் என TISL சுட்டிக்காட்டியுள்ளது.
மேலும், நீதிமன்ற உத்தரவுகளை நடைமுறைப்படுத்துவதற்கு மனுதாரர்கள் மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டிய நிலை ஏற்படக்கூடாது என்றும் அந்த அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
ஊழல் நடவடிக்கைகள் நீண்டகால சட்டரீதியான விளைவுகளையும் நற்பெயருக்குப் பாதிப்புகளையும் ஏற்படுத்தும் என எச்சரித்துள்ள TISL, அரச அதிகாரிகளின் செயற்பாடுகளைக் கண்காணித்து, அவர்களைப் பொறுப்புக்கூறச் செய்வதற்கான தனது நடவடிக்கைகளைத் தொடரப்போவதாகவும் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கு மீண்டும் 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது.