ட்ரம்பின் உயரிய விருதைப் பெறும் ரூடி ஜூலியானி!
அமெரிக்காவின் உயரிய குடிமக்கள் விருதான ‘சுதந்திரத்திற்கான ஜனாதிபதி பதக்கம்’ (Presidential Medal of Freedom) முன்னாள் நியூயோர்க் நகர மேயர் ரூடி ஜூலியானிக்கு வழங்கப்படவுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி அமெரிக்காவில் நடத்தப்பட்ட பயங்கரவாதத் தாக்குதல்களுக்குப் பின்னர், நியூயோர்க் நகரைத் திறம்பட வழிநடத்தியதற்காக ரூடி ஜூலியானி இந்த விருதுக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.
ட்ரம்பின் நெருங்கிய அரசியல் கூட்டாளியான ஜூலியானி குறித்து கருத்துத் தெரிவித்துள்ள ட்ரம்ப், அவரை நியூயோர்க் நகர வரலாற்றிலேயே மிகச் சிறந்த மேயர் என்றும், சிறந்த அமெரிக்க தேசப்பற்றாளர் என்றும் புகழ்ந்துள்ளார்.
82 வயதான ரூடி ஜூலியானியின் அரசியல் வாழ்க்கை கடந்த சில ஆண்டுகளில் ஏற்ற இறக்கங்களைச் சந்தித்துள்ளது.
செப்டெம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின்னர் தேசிய அளவில் புகழ்பெற்ற அவர், 2008ஆம் ஆண்டு குடியரசுக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் தெரிவுக்கான போட்டியில் களமிறங்கினார். இதன் மூலம் அமெரிக்க அரசியலில் முக்கிய அடையாளமாக மாறினார்.
எனினும், டொனால்ட் ட்ரம்பின் தனிப்பட்ட சட்டத்தரணியாகப் பணியாற்றிய காலத்தில், 2020ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் ட்ரம்ப் தோல்வியடைந்ததை மாற்றியமைக்கும் முயற்சிகளில் முக்கிய பங்காற்றினார்.
அப்போது ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடனுக்கு எதிரான தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை அவர் முன்வைத்திருந்தார். எனினும், நீதிமன்றங்கள் அந்தக் குற்றச்சாட்டுகளை நிராகரித்தன.
மேலும், ஜோர்ஜியா மாநிலத்தைச் சேர்ந்த இரண்டு முன்னாள் தேர்தல் பணியாளர்கள் தொடர்ந்த அவதூறு வழக்கில், அவருக்கு எதிராக 148 மில்லியன் அமெரிக்க டொலர் இழப்பீடு வழங்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தேர்தல் தொடர்பாகத் தொடர்ச்சியாகத் தவறான தகவல்களை வெளியிட்டதாகக் கூறி, நியூயோர்க் மற்றும் வொஷிங்டனில் உள்ள நீதிமன்றங்களால் அவர் சட்டத்தரணி தொழிலில் இருந்து நீக்கப்பட்டதுடன், பல்வேறு சட்ட நடவடிக்கைகளுக்கும் உள்ளானார்.
கடந்த ஆண்டு கார் விபத்தில் படுகாயமடைந்த சிறிது காலத்திலேயே, ஜூலியானிக்கு இந்த உயரிய விருதை வழங்கப்போவதாக ட்ரம்ப் அறிவித்திருந்தார்.
இந்த விருது குறித்து மகிழ்ச்சி தெரிவித்துள்ள ஜூலியானி, தன்னுடன் இணைந்து பணியாற்றியவர்கள், தன்னுடன் கருத்து வேறுபாடு கொண்டவர்கள் மற்றும் தனக்கு ஆதரவாக இருந்த அனைவருடனும் இந்த விருதுக்கான பெருமையைப் பகிர்ந்துகொள்வதாகக் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, தாங்கள் இணைந்து முன்னெடுத்த பணிகளின்போது உயிரிழந்தவர்களுக்கும் இந்த விருதுக்கான பெருமையைச் சமர்ப்பிப்பதாக அவர் தெரிவித்துள்ளார்.
இதற்கிடையில், ட்ரம்ப் தனது இரண்டாவது பதவிக்காலத்தில், 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதலின்போது பலரை மீட்டதால் ‘சிவப்பு கைக்குட்டை அணிந்த மனிதர்’ என அறியப்பட்ட வெல்ஸ் க்ரோதருக்கும் மரணத்திற்குப் பின்னர் இந்த விருதை வழங்கியுள்ளார்.
அதேபோன்று, படுகொலை செய்யப்பட்ட பழமைவாத அரசியல் செயற்பாட்டாளர் சார்லி கிர்க்குக்கும் மரணத்திற்குப் பின்னர் இந்த விருது வழங்கப்பட்டுள்ளது.
ட்ரம்ப் தனது முதலாவது பதவிக்காலத்திலும் கோல்ஃப் விளையாட்டு ஜாம்பவான் டைகர் வூட்ஸ், முன்னாள் கால்பந்துப் பயிற்சியாளர் லூ ஹோல்ட்ஸ், பொருளாதார நிபுணர் ஆர்தர் லாஃபர், முன்னாள் பேஸ்பால் வீரர் மரியானோ ரிவேரா மற்றும் வானொலி நிகழ்ச்சித் தொகுப்பாளர் ரஷ் லிம்பாக் உள்ளிட்ட பலருக்கு இந்த விருதை வழங்கியுள்ளார்.
மேலும், பேஸ்பால் ஜாம்பவான் பேப் ரூத் மற்றும் பிரபல பாடகர் எல்விஸ் பிரெஸ்லி ஆகியோருக்கும் மரணத்திற்குப் பின்னர் இந்த விருது வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.