டெலிகிராம் ஊடாக இணைய வணிக மோசடி; 26 வயது இளைஞர் கைது!
டெலிகிராம் (Telegram) செயலி ஊடாக இணையவழி வணிகத்தில் பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி நிதி மோசடியில் ஈடுபட்டதாகச் சந்தேகிக்கப்படும் 26 வயதுடைய இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சூரியவெவ பகுதியைச் சேர்ந்த சந்தேகநபர், நேற்று (20) வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவின் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டதாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
டெலிகிராம் செயலி ஊடாகத் தொடர்புகொண்ட ஒருவர், இணையவழி வணிகத்தில் ஈடுபடுவதன் மூலம் பணம் சம்பாதிக்க முடியும் என உறுதியளித்துப் பணத்தைப் பெற்றுக்கொண்டதாக அளிக்கப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இந்தச் சம்பவத்தில் மொத்தமாக 13 இலட்சத்து 57 ஆயிரத்து 220 ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாக முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 1 இலட்சத்து 51 ஆயிரம் ரூபாய் சந்தேகநபரின் வங்கிக் கணக்கில் வைப்பிலிடப்பட்டுள்ளதாகப் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
நிதி மோசடியில் தொடர்புபட்டமை மற்றும் குறித்த குற்றச் செயலுக்கு உதவி ஒத்தாசை வழங்கியமை ஆகிய குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வடமேல் மாகாண கணினி குற்ற விசாரணைப் பிரிவினர் முன்னெடுத்து வருகின்றனர்.