செக் மோசடி வழக்கு: நடிகர் விமலின் மனுவைத் தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம்
நடிகர் விமலுக்கு எதிரான செக் மோசடி வழக்கில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகக் கூறி, அது தொடர்பாக விசாரணை நடத்தக் கோரி அவர் தாக்கல் செய்த மனுவைச் சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது.
‘மன்னர் வகையறா’ திரைப்படத் தயாரிப்புக்காக நடிகர் விமல், நிதி வழங்குநரான கோபி என்பவரிடம் இருந்து 4 கோடியே 50 இலட்சம் ரூபாயைக் கடனாகப் பெற்றிருந்தார்.
குறித்த கடனைத் திருப்பிச் செலுத்துவதற்காக விமல் வழங்கிய காசோலையை வங்கியில் சமர்ப்பித்தபோது, அவரது வங்கிக் கணக்கில் போதிய பணம் இல்லாததால் அது திரும்பிச் சென்றுள்ளது.
இதையடுத்து, நடிகர் விமலுக்கு எதிராக கோபி, சென்னையில் உள்ள 11-வது சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், விமலுக்கு எதிரான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனை விதித்ததுடன், காசோலைக்கான தொகையை கோபிக்குத் திருப்பிச் செலுத்தவும் உத்தரவிட்டது.
இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கில் குறிப்பிடப்பட்டுள்ள காசோலை விவரங்கள் உண்மையான ஆவணங்களில் இடம்பெறவில்லை என்றும், மோசடியான ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்து, நிதி வழங்குநர் கோபிக்கு எதிராக நடிகர் விமல் மனுவொன்றைத் தாக்கல் செய்தார்.
எனினும், பிரதான வழக்கில் ஏற்கனவே தீர்ப்பு வழங்கப்பட்டுவிட்டதால், குறித்த மனு விசாரணைக்கு உகந்ததல்ல எனக் கூறி, சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றம் அதனைத் திருப்பி அனுப்பியது.
இந்த உத்தரவை ரத்து செய்து, தனது மனுவை ஏற்றுக்கொண்டு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு சிறு வழக்குகளை விசாரிக்கும் நீதிமன்றத்துக்கு உத்தரவிடக் கோரி, நடிகர் விமல் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி ஜி.கே.இளந்திரையன், கீழமை நீதிமன்றத்தின் உத்தரவில் எவ்வித சட்டவிரோதமும் இல்லை எனத் தெரிவித்து, நடிகர் விமல் தாக்கல் செய்த மனுவைத் தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.