சுற்றுலா, மருத்துவம், வர்த்தகம் உள்ளிட்டவற்றுக்கான இந்திய விசா நடைமுறைகளில் அதிரடி மாற்றம்!

arvloshan.com

இந்தியாவுக்குச் சுற்றுலா, மருத்துவச் சிகிச்சை, கல்வி, ஆராய்ச்சி மற்றும் வர்த்தக நடவடிக்கைகளுக்காகச் செல்லும் வெளிநாட்டுப் பிரஜைகளுக்கான விசா நடைமுறைகளை இந்திய அரசாங்கம் எளிமைப்படுத்தியுள்ளது.

இதற்கமைய, பிரதான விசா வகைகளின் எண்ணிக்கை 13 இலிருந்து 9 ஆகவும், உப பிரிவுகளின் எண்ணிக்கை 49 இலிருந்து 23 ஆகவும் குறைக்கப்பட்டுள்ளதாக இந்திய உள்துறை அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன், விசா விண்ணப்பப் படிவங்களிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. இதன்படி, 23 விசா உப பிரிவுகளுக்குமான விண்ணப்பங்களில் நிரப்ப வேண்டிய தகவல் பகுதிகள் 65 முதல் 70 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளன.

இதற்கு முன்னர், 2025 ஒக்டோபர் மாதத்திலும் விசா நடைமுறைகளைச் சீரமைக்கும் நடவடிக்கைகளை இந்திய அரசாங்கம் முன்னெடுத்திருந்தது. இந்நிலையில், வளர்ச்சியடைந்த நாடுகளின் விசா நடைமுறைகள் மற்றும் சர்வதேச தரநிலைகளை ஆய்வு செய்த பின்னர் தற்போதைய மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

சுற்றுலா விசாவுக்குப் பதிலாக வருகை விசா

இந்த மாற்றங்களில் முக்கியமானதாக, இதுவரை நடைமுறையில் இருந்த சுற்றுலா விசா (Tourist Visa) என்பது வருகை விசா (Visitor Visa) எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்தப் புதிய விசா நடைமுறையின் கீழ், சுற்றுலா மட்டுமன்றி குறுகியகால வர்த்தகச் சந்திப்புகள், மருத்துவ ஆலோசனைகள், ஆரோக்கியப் பயிற்சிகள், குறுகியகால மருத்துவச் சிகிச்சைகள் மற்றும் இந்திய மொழிகள், இசை, கலை, கைவினை உள்ளிட்டவற்றைக் கற்கும் வாய்ப்புகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.

வருகை விசா V-1 மற்றும் V-2 என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

V-1 விசா 30 நாட்கள் செல்லுபடியாகும் வகையில் பலமுறை இந்தியாவுக்குள் நுழையும் அனுமதியுடன் வழங்கப்படும். சுற்றுலா உள்ளிட்ட மேற்குறிப்பிட்ட குறுகியகால நடவடிக்கைகளுக்கு இந்த விசா பயன்படுத்த முடியும். குறுகியகால யோகா பயிற்சிகளும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

V-2 விசா, நீண்டகாலப் பயணங்களுக்காக வழங்கப்படுவதுடன், தகுதியின் அடிப்படையில் ஓராண்டு, ஐந்து ஆண்டுகள் அல்லது 10 ஆண்டுகள் செல்லுபடியாகும் வகையில் வழங்கப்படும். V-1 விசாவின் கீழ் அனுமதிக்கப்படும் நடவடிக்கைகளுடன் மலையேற்றத்திலும் ஈடுபடுவதற்கு இந்த விசா அனுமதியளிக்கும். மலையேற்றத்துக்காக ஆறு மாத கால பல்முறை நுழைவு அனுமதியும் தனியாக வழங்கப்படும்.

மருத்துவ விசாவுக்கு ஓராண்டு செல்லுபடியாகும் காலம்

மருத்துவ விசா நடைமுறையிலும் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

இதன்படி, ஆயுர்வேதம் உள்ளிட்ட AYUSH மருத்துவ முறைகள் அல்லாத ஏனைய மருத்துவச் சிகிச்சைகளுக்கு M-1 விசாவும், AYUSH மருத்துவ முறைகளின் கீழான சிகிச்சைகளுக்கு M-3 விசாவும் வழங்கப்படும்.

இவ்விரு விசாக்களும் மின்னணு விசா (e-Visa) உட்பட, பொதுவாக ஓராண்டு செல்லுபடியாகும் வகையில் பலமுறை நுழைவு அனுமதியுடன் வழங்கப்படும்.

அதேவேளை, M-1 விசா பெற்றவர்களுடன் செல்லும் உதவியாளர்களுக்கு M-2 விசாவும், M-3 விசா பெற்றவர்களுடன் செல்லும் உதவியாளர்களுக்கு M-4 விசாவும் வழங்கப்படும்.

இதன் மூலம் நீண்டகால மருத்துவச் சிகிச்சை, தொடர்ச்சியான மருத்துவ ஆலோசனைகள் மற்றும் மேலதிக பரிசோதனைகளுக்காக இந்தியா செல்லும் வெளிநாட்டவர்களுக்கு விசா பெறுவதில் ஏற்படும் சிரமங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நடவடிக்கை இந்தியாவின் 'Heal in India' திட்டத்தின் ஒரு பகுதியாகவும் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மாணவர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்குப் புதிய விசா நடைமுறைகள்

மாணவர் விசா இரண்டு பிரதான பிரிவுகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

S-1 விசா பாடசாலைக் கல்வி, பட்டப்படிப்பு மற்றும் முதுகலைப் படிப்புகளுக்காக வழங்கப்படும்.

S-2 விசா கலாநிதிப் பட்ட ஆய்வாளர்கள், ஆராய்ச்சி மாணவர்கள், வருகைதரும் விரிவுரையாளர்கள், விஞ்ஞான மற்றும் மானுடவியல் ஆய்வுப் பயணங்கள், பயிற்சிகள் மற்றும் பரிமாற்றக் கல்வித் திட்டங்கள் உள்ளிட்ட கல்விசார் நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்.

'Study in India' இணையவழித் தளத்தின் ஊடாக இந்தியக் கல்வி நிறுவனங்களில் அனுமதி பெற்ற வெளிநாட்டு மாணவர்களுக்கு, அவர்களது கல்வித் திட்டத்தின் காலம் அல்லது அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் வரை செல்லுபடியாகும் e-S1 விசா வழங்கப்படலாம். இதற்கும் பலமுறை நுழைவு அனுமதி வழங்கப்படும்.

வர்த்தக விசா நடைமுறைகளிலும் மாற்றம்

வர்த்தக விசா B-1 மற்றும் B-2 என இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது.

B-1 விசா, இந்தியாவில் தொழிற்துறை அல்லது வர்த்தக நிறுவனங்களை நிறுவ விரும்பும் வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நீண்டகால வர்த்தக நடவடிக்கைகளுக்காக வழங்கப்படும்.

B-2 விசா, குறுகியகால ஒப்பந்த அடிப்படையிலான வர்த்தக நடவடிக்கைகள், உற்பத்தி முதலீடு தொடர்பான வர்த்தகம், மாநாடுகள், விளையாட்டு நிகழ்வுகள், கலாசார நிகழ்ச்சிகள் மற்றும் திரைப்படப் படப்பிடிப்புகள் உள்ளிட்டவற்றுக்காக வழங்கப்படும்.

மேலும், இந்திய நிறுவனங்களால் பணியமர்த்தப்படும் வெளிநாட்டு நிபுணர்கள், பொறியியலாளர்கள் மற்றும் தொழில்நுட்பப் பணியாளர்களுக்காகவும் புதிய ஏற்பாடு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இயந்திரங்களை நிறுவுதல், தரப் பரிசோதனை, பராமரிப்பு, உற்பத்தி, தகவல் தொழில்நுட்பம், பயிற்சி, விநியோகச் சங்கிலி மேம்பாடு, தொழிற்சாலை வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப உதவி உள்ளிட்ட பணிகளில் ஈடுபடும் நிபுணர்களுக்கு B-2 பிரிவின் கீழ் உற்பத்தி முதலீட்டு வர்த்தக விசா (Production Investment Business Visa) வழங்கப்படும்.

இந்த விசாவை மின்னணு விசா முறையிலும் பெற்றுக்கொள்ள முடியும். இதற்கு முன்னர் இவ்வாறான விசாக்கள் e-B4 என்ற பெயரில் வழங்கப்பட்டு வந்ததாக இந்திய அரசாங்கம் தெரிவித்துள்ளது.

172 நாடுகளுக்கு மின்னணு விசா வசதி

தற்போது 172 நாடுகளைச் சேர்ந்த பிரஜைகளுக்கு இந்தியா மின்னணு விசா வசதியை வழங்கி வருகிறது. 13 உப பிரிவுகளின் கீழ் மின்னணு பயண அங்கீகாரத்தின் ஊடாக இந்த விசாக்கள் வழங்கப்படுகின்றன.

புதிய விசா நடைமுறைகளைச் செயல்படுத்துவதற்காகத் தகவல் தொழில்நுட்பக் கட்டமைப்புகளை மேம்படுத்தும் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக இந்திய உள்துறை அமைச்சு தெரிவித்துள்ளது.

புதிய நடைமுறைகளின் கீழ் விசாக்கள் 2026ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதன்படி, இந்தியாவின் புதிய விசா கட்டமைப்பில் வர்த்தக, இராஜதந்திர, வேலைவாய்ப்பு, ஊடகவியலாளர், மருத்துவ, உத்தியோகபூர்வ, மாணவர், வருகை மற்றும் இதர விசாக்கள் என ஒன்பது பிரதான பிரிவுகள் இடம்பெறவுள்ளன.

இதர விசா பிரிவின் கீழ் இந்திய வம்சாவளியினர், அவர்களது வாழ்க்கைத்துணை மற்றும் பிள்ளைகள், நீண்டகால விசா வைத்திருக்கும் வெளிநாட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், அவுரோவில் அறக்கட்டளை போன்ற குறிப்பிட்ட நிறுவனங்களில் இணைபவர்கள், இந்தியாவில் தங்குவதற்கு விசா கோரும் ஆப்கானிஸ்தான் பிரஜைகள் மற்றும் அண்டை நாடுகளைச் சேர்ந்த சிலருக்கான நீண்டகால விசா ஏற்பாடுகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன.
 


ஏனைய செய்திகள்

arvoshan.com

தவெகவின் ஆறு மாத கால ஆட்சி நம்பிக்கை அளிப்பதாக இல்லை – மு.வீரபாண்டியன்

...

arvoshan.com

நவம்பர் 15ஆம் திகதிக்குள் வங்கக் கடலில் காற்றழுத்தத் தாழ்வு மண்டலம் உருவாகும் வாய்ப்பு – இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

...

arvoshan.com

சென்னையில் ரூ.1,401 கோடி செலவில் 6,157 புதிய அடுக்குமாடிக் குடியிருப்புகள் – முதல்வர் விஜய் ஒப்புதல்

...

arvoshan.com

“தவெக எம்.எல்.ஏக்களுக்கு சட்டத்துக்கு அப்பாற்பட்ட அதிகாரமா?” – அண்ணாமலை கேள்வி

...

arvoshan.com

இந்தியாவின் புதுடெல்லியில் நடைபெற்ற இலங்கையின் கட்டினா பூஜை நிகழ்வு

...

arvoshan.com

சமயபுரம் இரட்டைக் கொலை வழக்கில் 6 பேர் கைது: தப்பியோட முயன்ற இளைஞர் மீது பொலிஸார் துப்பாக்கிச் சூடு

...

arvoshan.com

உத்தரப் பிரதேசத்தில் கோர விபத்து: கார் தீப்பிடித்து எரிந்ததில் 6 நண்பர்கள் உடல் கருகி உயிரிழப்பு

...

arvoshan.com

கடத்தல் மிரட்டல்: கொல்கத்தாவில் புறப்படத் தயாராக இருந்த ஏர் இந்தியா விமான சேவை ரத்து!

...

arvoshan.com

டெல்லியில் மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து விபத்து – இருவர் உயிரிழப்பு; பலரைத் தேடும் பணி தீவிரம்

...

arvoshan.com

ஆந்திர கடற்பகுதியில் 5 சென்னை மீனவர்கள் சடலமாக மீட்பு; 4 பேரைத் தேடும் பணி தீவிரம்

...

arvoshan.com

“தவெக ஆட்சி நீடிப்பது தமிழக மக்களுக்கு நல்லதல்ல” – மு.க.ஸ்டாலின் விமர்சனம்

...

arvoshan.com

மூன்று மாதக் குழந்தைக்கு ‘விஜய்’ எனப் பெயர் சூட்டிய முதல்வர் விஜய் – நெகிழ்ச்சியில் தாய்

...

arvoshan.com

கோவை கருமத்தம்பட்டி காவல் நிலையத்தில் முதல்வர் விஜய் திடீர் ஆய்வு!

...

arvoshan.com

PUBG விளையாட்டின் தாக்கமா? 6 வயது சிறுமி மீது 8 வயது சிறுவன் கொடூரத் தாக்குதல்!

...

arvoshan.com

இந்தியாவில் கரையைக் கடந்த ‘முரசு’ புயல்; கடற்பகுதிகளில் பலத்த காற்று மற்றும் கடல் கொந்தளிப்புக்கான எச்சரிக்கை

...