சுகாதாரத் துறையில் 223 பேருக்கு நிரந்தர நியமனம் – அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ
நாட்டின் சுகாதாரத் துறையில் நிலவும் ஆளணிப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, வைத்தியசாலைகள் மற்றும் சுகாதார நிறுவனங்களின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்தும் நோக்கில் 223 பேருக்கு நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் கீழ் நான்கு முக்கிய சேவைப் பிரிவுகளில் இந்த நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதற்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு இன்று (14) காலை, சுகாதார அமைச்சின் உயிரியல் மருத்துவப் பொறியியல் பிரிவின் புதிய கேட்போர் கூடத்தில், சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் நடைபெற்றது.
இதன்போது உரையாற்றிய அமைச்சர், அரச சேவையைத் தேவையற்ற வகையில் விரிவுபடுத்தி நாட்டின் பொருளாதாரத்தின் மீது மேலதிக சுமையை ஏற்படுத்த அரசாங்கம் தயாராக இல்லை எனத் தெரிவித்தார்.
கடந்த காலங்களில் தேர்தல் அரசியல் நோக்கங்களுக்காக அரச துறையில் ஆட்சேர்ப்புகள் மேற்கொள்ளப்பட்டதாகக் குறிப்பிட்ட அவர், தற்போதைய அரசாங்கம் நிறுவனங்களின் உண்மையான ஆளணித் தேவைகளை அடிப்படையாகக் கொண்டே நியமனங்களை வழங்கி வருவதாகவும் தெரிவித்தார்.
பிரதமரின் செயலாளர் தலைமையிலான குழுவின் ஊடாக நிறுவனங்களின் ஆளணித் தேவைகள் மதிப்பீடு செய்யப்பட்ட பின்னரே இவ்வாறான நியமனங்கள் வழங்கப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
இதன்படி, அரச சுகாதார முகாமைத்துவ உதவியாளர் சேவையில் 36 பேருக்கும், களஞ்சியக் காப்பாளர் பதவிக்கு 27 பேருக்கும், சிறு சேவை மேற்பார்வையாளர் பதவிக்கு 6 பேருக்கும், சுகாதாரப் பராமரிப்பு உதவியாளர் பதவிக்கு 154 பேருக்கும் நிரந்தர நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளன.
இதேவேளை, இம்மாத இறுதிக்குள் ஆரம்பத் தர மருத்துவ அதிகாரிகள் மேலும் 1,600 பேரை ஆட்சேர்ப்பு செய்யத் திட்டமிட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.
அரச ஊழியர்களுக்கான வருடாந்த சம்பளச் செலவினம் தற்போது சுமார் 900 பில்லியன் ரூபாவை அண்மித்துள்ளதாகக் குறிப்பிட்ட அமைச்சர், இந்த நிதி முழுமையாகப் பொதுமக்களின் வரிப்பணத்தின் ஊடாகவே செலவிடப்படுவதாகவும் சுட்டிக்காட்டினார்.
எனவே, அரச அதிகாரிகள் பொதுமக்களின் வரிப்பணத்தைப் பொறுப்புடன் கையாள்வதுடன், தங்களது கடமைகளையும் பொறுப்புணர்வுடன் நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.
மேலும், புதிதாக நிரந்தர நியமனம் பெற்றவர்களும் அரசாங்கத்தின் எதிர்வரும் சம்பளத் திருத்தங்களின் பலன்களைப் பெற்றுக்கொள்வார்கள் எனத் தெரிவிக்கப்பட்டது. இதன்படி, ஜனவரி மாதத்தில் அடிப்படைச் சம்பள அதிகரிப்பும், ஜூலை மாதத்தில் கொடுப்பனவு அதிகரிப்பும் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்வில் சுகாதார அமைச்சின் செயலாளர் விசேட வைத்திய நிபுணர் அனில் ஜாசிங்க, மேலதிக செயலாளர் ஜனக கித்சிறி குணவர்தன, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன உள்ளிட்ட அமைச்சின் உயர் அதிகாரிகள் பலரும் கலந்துகொண்டனர்.