சீனப் போட்டியால் நெருக்கடியில் ஜாகுவார்; 4,000 வேலைவாய்ப்புகள் குறைப்பு!
பிரித்தானியாவின் முன்னணி சொகுசு வாகன உற்பத்தி நிறுவனமான ஜாகுவார் லேண்ட் ரோவர் (Jaguar Land Rover – JLR), அதிகரித்து வரும் சீன வாகன உற்பத்தியாளர்களின் போட்டி மற்றும் நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு மத்தியில் பாரிய நிதி நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
இதன் விளைவாக, 2026 ஜூலை முதல் செப்டெம்பர் வரையிலான காலாண்டில் அந்நிறுவனம் 451 மில்லியன் பவுண்டுகள் (சுமார் 600 மில்லியன் அமெரிக்க டொலர்கள்) நிகர இழப்பைப் பதிவு செய்துள்ளது.
எனினும், கடந்த ஆண்டின் இதே காலப்பகுதியுடன் ஒப்பிடுகையில் நிறுவனத்தின் வருமானம் 20.3 சதவீதத்தால் அதிகரித்து 5.9 பில்லியன் பவுண்டுகளாக உயர்ந்துள்ளது.
டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான ஜாகுவார் லேண்ட் ரோவர், நிறுவன மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்காக 530 மில்லியன் பவுண்டுகளை விசேட செலவினங்களாகப் பதிவு செய்துள்ளது. இதில் பணியாளர்களுக்கான இழப்பீடுகள் மற்றும் சொத்துக்களின் மதிப்புக் குறைப்புச் செலவுகள் உள்ளடங்குகின்றன.
இதன் ஒரு பகுதியாக, உலகளாவிய ரீதியில் சுமார் 4,000 வேலைவாய்ப்புகளைக் குறைக்க நிறுவனம் திட்டமிட்டுள்ளது. ஏற்கனவே சுமார் 3,000 பணியாளர்கள் தன்னார்வமாகப் பணியிலிருந்து விலகுவதற்கு இணக்கம் தெரிவித்துள்ளதாகவும், அவர்களில் பெரும்பாலானோர் நவம்பர் மாத இறுதிக்குள் வெளியேறுவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சீனா மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் நிறுவனத்தின் விற்பனை வீழ்ச்சியடைந்துள்ளதுடன், உலகளாவிய வாகனச் சந்தையில் சீன மின்சார வாகன உற்பத்தியாளர்களின் போட்டியும் தீவிரமடைந்துள்ளது.
சீன நிறுவனங்களிடமிருந்து அதிகரித்து வரும் போட்டி குறித்து எச்சரிக்கை விடுத்துள்ள ஜாகுவார் லேண்ட் ரோவரின் தலைமை நிர்வாக அதிகாரி பி.பி. பாலாஜி (PB Balaji), இந்தப் போட்டியை எதிர்கொள்வதற்காக பிரித்தானியாவும் ஐரோப்பிய ஒன்றியமும் தங்களுக்கிடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்த வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
இருப்பினும், விசேட செலவினங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளுக்கு முந்தைய கணக்கீட்டின்படி, கடந்த ஆண்டின் இதே காலாண்டில் 485 மில்லியன் பவுண்டுகள் இழப்பைப் பதிவு செய்த நிறுவனம், இம்முறை 6 மில்லியன் பவுண்டுகள் வரிக்கு முந்தைய இலாபத்தைப் பதிவு செய்துள்ளது.
இதற்கிடையில், ரேஞ்ச் ரோவர் எலெக்ட்ரிக் (Range Rover Electric), ரேஞ்ச் ரோவர் ஸ்போர்ட் எலெக்ட்ரிக் (Range Rover Sport Electric) மற்றும் ஜாகுவார் டைப் 01 (Jaguar Type 01) உள்ளிட்ட மூன்று புதிய சொகுசு மின்சார வாகனங்களையும் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இவற்றின் விநியோகம் 2027ஆம் ஆண்டின் ஆரம்பத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அடுத்த இரண்டு ஆண்டுகளில் நிறுவன மறுசீரமைப்பு மற்றும் செயற்பாட்டுத் திறன் மேம்பாட்டு நடவடிக்கைகள் மூலம் 1.7 பில்லியன் பவுண்டுகளைச் செலவினங்களிலிருந்து சேமிக்கவும் ஜாகுவார் லேண்ட் ரோவர் இலக்கு நிர்ணயித்துள்ளது.
எவ்வாறாயினும், சந்தை நிலவரங்கள், புவிசார் அரசியல் அபாயங்கள் மற்றும் மறுசீரமைப்புச் செலவினங்களைக் கருத்தில் கொண்டு, முழு ஆண்டுக்கான இலாப விகித எதிர்பார்ப்பை 2 முதல் 3 சதவீதமாக நிறுவனம் குறைத்துள்ளது.
ரேஞ்ச் ரோவர், டிஃபென்டர், டிஸ்கவரி மற்றும் ஜாகுவார் ஆகிய முன்னணி சொகுசு வாகன வர்த்தக நாமங்களைக் கொண்டுள்ள இந்நிறுவனம், புதிய மின்சார வாகன அறிமுகங்கள் மற்றும் வட அமெரிக்கச் சந்தையில் விரிவாக்கம் ஆகியவற்றின் மூலம் சர்வதேச வாகனச் சந்தையில் தனது நிலையைப் பாதுகாக்கத் திட்டமிட்டுள்ளது.