சாமர சம்பத் தசநாயக்கவுக்கு நான்கு இலஞ்ச வழக்குகளில் பிணை – மற்றொரு வழக்கில் நவம்பர் 6 வரை விளக்கமறியல்!
இலங்கை நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோருக்கு எதிராகத் தாக்கல் செய்யப்பட்ட நான்கு இலஞ்ச வழக்குகளில் பிணை வழங்கி கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று (23) உத்தரவிட்டுள்ளது.
எனினும், பாஸ்பேட் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டமை தொடர்பான மற்றொரு இலஞ்ச வழக்கில் இருவருக்கும் பிணை வழங்க மறுத்த நீதிமன்றம், அவர்களை எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளது.
கொழும்பு பிரதம நீதவான் அசங்க எஸ். போதராகம, இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு மற்றும் சந்தேகநபர்கள் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் முன்வைத்த சமர்ப்பணங்களைப் பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளார்.
நான்கு வழக்குகளிலும் ஒவ்வொரு சந்தேகநபருக்கும் தலா இரண்டு 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான சரீரப் பிணைகளைச் செலுத்தி விடுவிக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார். அத்துடன், இருவருக்கும் வெளிநாட்டுப் பயணத் தடையும் விதிக்கப்பட்டுள்ளது.
இரத்தினக்கல் வியாபாரிகளிடம் இலஞ்சம் கோரியதாகக் குற்றச்சாட்டு
சாமர சம்பத் தசநாயக்க, ஆரம்பக் கைத்தொழில்கள் இராஜாங்க அமைச்சராகப் பதவி வகித்த காலப்பகுதியில், இரத்தினக்கல் வியாபாரிகளிடம் இலஞ்சம் பெற்று, அவர்களின் வியாபார நடவடிக்கைகளுக்கு இடையூறு ஏற்படாமல் செயற்பட அனுமதித்ததாகக் கூறப்படும் குற்றச்சாட்டுகள் தொடர்பில் மூன்று வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் குற்றச்சாட்டுகளின்படி, முதலாவது வழக்கில் இரத்தினக்கல் வியாபாரி ஒருவரிடம் 12 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரி, அதில் ஐந்து இலட்சம் ரூபாயைப் பெற்றுக்கொண்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது வழக்கில் மற்றொரு இரத்தினக்கல் வியாபாரியிடம் 10 இலட்சம் ரூபாய் இலஞ்சம் கோரிப் பெற்றுக்கொண்டதாகவும், மூன்றாவது வழக்கில் பிறிதொரு வியாபாரியிடம் இரண்டு இலட்சம் ரூபாய் இலஞ்சம் பெற்றதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளில் லியனாராச்சிகே சுமதிபால லியனாராச்சி இரண்டாவது சந்தேகநபராகப் பெயரிடப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளது.
இந்த மூன்று வழக்குகளுடன் மேலும் ஒரு இலஞ்ச வழக்கிலும் இருவருக்கும் பிணை வழங்கப்பட்டுள்ளது. குறித்த நான்கு வழக்குகளும் எதிர்வரும் ஜனவரி 26ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன.
பாஸ்பேட் ஏற்றுமதி அனுமதிப்பத்திர வழக்கில் பிணை நிராகரிப்பு
இதற்கிடையில், பாஸ்பேட் ஏற்றுமதிக்குத் தேவையான அனுமதிப்பத்திரங்களை வழங்குவதுடன் தொடர்புடைய தனியான இலஞ்ச வழக்கில் சாமர சம்பத் தசநாயக்க மற்றும் அவரது முன்னாள் செயலாளர் ஆகியோர் மீது குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
மூன்று தனியார் நிறுவனங்களுக்கு பாஸ்பேட் ஏற்றுமதி அனுமதிப்பத்திரங்களை வழங்கியமை தொடர்பில், 81 இலட்சம் ரூபாய் இலஞ்சமாகப் பெற்றுக்கொண்டதாகவும், குறித்த குற்றச்செயலுக்கு உடந்தையாக இருந்ததாகவும் இருவருக்கும் எதிராகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் சந்தேகநபர்கள் சார்பில் முன்வைக்கப்பட்ட பிணை கோரிக்கைகளை நிராகரித்த நீதவான், இருவரையும் எதிர்வரும் நவம்பர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டுள்ளார்.