சர்வதேச பிடியாணை பிறப்பிக்கப்பட்ட 43 இலங்கை குற்றவாளிகள் வெளிநாடுகளில் அடையாளம் – 17 பேர் டுபாயில்!
சர்வதேச சிவப்பு எச்சரிக்கை (Red Notice) பிறப்பிக்கப்பட்டு தேடப்பட்டு வரும் 43 இலங்கை ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் தற்போது தங்கியுள்ள நாடுகள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.
இன்று (28) நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அவர், குறித்த 43 பேரில் 17 பேர் டுபாயிலும், 14 பேர் இந்தியாவிலும், 3 பேர் ஜப்பானிலும் தங்கியுள்ளதாகக் குறிப்பிட்டார்.
மேலும், ஏனைய 9 பேர் ஒன்பது வெவ்வேறு நாடுகளில் தங்கியுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இவர்கள் அனைவரையும் விரைவில் இலங்கைக்கு அழைத்து வருவதற்குத் தேவையான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கடந்த இரண்டு ஆண்டுகளில் இலங்கையில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 818 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் இதன்போது தெரிவித்தார்.
அத்துடன், வெளிநாடுகளில் தங்கியுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல் சந்தேகநபர்களுக்கு எதிராக 233 சர்வதேச சிவப்பு எச்சரிக்கைகளும் (Red Notices), 92 நீல எச்சரிக்கைகளும் (Blue Notices) பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதற்கிடையில், வெளிநாடுகளில் இருந்து ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுடன் தொடர்புடைய 72 சந்தேகநபர்கள் ஏற்கனவே இலங்கைக்கு அழைத்து வரப்பட்டுள்ளதாகவும், அவர்களுக்கு எதிரான விசாரணைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.