சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக பேராசிரியர் கலெல்லே சுமனசிறி தேரர் நியமனம்!
இலங்கை சபரகமுவ பல்கலைக்கழகத்தின் புதிய வேந்தராக அகமஹா பண்டிதர், சிரேஷ்ட பேராசிரியர் வணக்கத்துக்குரிய கலெல்லே சுமனசிறி தேரரை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.
இந்த நியமனக் கடிதம் இன்று (23) ஜனாதிபதி செயலகத்தில் வைத்து, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்கவினால் சுமனசிறி தேரரிடம் கையளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
மொலகொட, கொட்டமுடுங்கல ராஜமகா விகாரையின் பிரதம விகாராதிபதியாகப் பணியாற்றும் சுமனசிறி தேரர், இதற்கு முன்னர் இலங்கை ரஜரட்ட பல்கலைக்கழகம் மற்றும் இலங்கை பௌத்த மற்றும் பாளி பல்கலைக்கழகம் ஆகியவற்றின் துணைவேந்தராகப் பணியாற்றியுள்ளார்.
களனி பல்கலைக்கழகத்தில் பௌத்த தத்துவத்தில் இளங்கலைப் பட்டத்தையும், தத்துவ முதுகலைப் பட்டத்தையும் பெற்றுள்ள அவர், இந்தியாவின் டெல்லி பல்கலைக்கழகத்தில் தத்துவ முதுகலைப் பட்டம் மற்றும் கலாநிதிப் பட்டத்தையும் பெற்றுள்ளார்.
மேலும், சீனாவின் பீக்கிங் பல்கலைக்கழகத்தில் சீன மொழிக்கான உயர் டிப்ளோமா கற்கையையும் அவர் நிறைவு செய்துள்ளார்.