கென்யாவில் பட்டினி வழிபாட்டு குழுத் தலைவர் 123 பேரின் உயிரிழப்புகளுக்குக் குற்றவாளி எனத் தீர்ப்பு!
கென்யாவில் பட்டினி கிடந்து உயிரிழக்குமாறு தனது ஆதரவாளர்களைத் தூண்டிய மதப் போதகர் போல் மெக்கன்சி (Paul Mackenzie), 123 பேரின் உயிரிழப்புகளுடன் தொடர்புடைய ஆள்கொலைக் குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்டுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை மொம்பாசா நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. சிறுவர்களைக் கொலை செய்த வழக்கில் 200 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டு ஒரு மாதம் கூட நிறைவடையாத நிலையில், இந்தத் தீர்ப்பும் வழங்கப்பட்டுள்ளது.
கென்யாவின் கடற்கரைப் பகுதியான மாலிந்தி (Malindi) அருகிலுள்ள ஷகஹோலா வனப்பகுதியில் (Shakahola Forest) 2023ஆம் ஆண்டு முதல் நூற்றுக்கணக்கான சடலங்கள் கண்டெடுக்கப்பட்டன. இந்தச் சம்பவம் 'ஷகஹோலா வனப் படுகொலை' என அழைக்கப்படுகிறது.
மெக்கன்சி தனது ஆதரவாளர்களை முறையாகத் திட்டமிட்டு பட்டினி கிடந்து உயிரிழக்குமாறு தூண்டியதாக அரசுத் தரப்பு வழக்குத் தொடுநர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
அவரது திட்டத்தின்படி முதலில் சிறுவர்களும், பின்னர் பெண்களும், அதன் பின்னர் ஆண்களும் பட்டினி கிடந்து உயிரிழக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டிருந்ததாகவும், இறுதியாக மெக்கன்சி உயிரிழக்கத் திட்டமிட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வழக்கு விசாரணையின்போது உயிர் தப்பியவர்கள், விசாரணை அதிகாரிகள் மற்றும் டிஜிட்டல் தடயவியல் நிபுணர்கள் உள்ளிட்ட 95 பேர் சாட்சியமளித்துள்ளனர்.
மொத்தம் 238 பேரின் பிரேதப் பரிசோதனைப் பதிவுகளில், 129 பேர் பட்டினியால் உயிரிழந்தமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது. மேலும், 86 பேரின் எச்சங்கள் பெரும்பாலும் எலும்புக்கூடுகளாக இருந்ததால், அவர்களின் மரணத்திற்கான காரணத்தைக் கண்டறிய முடியவில்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டிருந்த 60 பேர் அனைத்து குற்றச்சாட்டுகளிலிருந்தும் விடுவிக்கப்பட்டுள்ளனர். எனினும், இந்தத் தீர்ப்புக்கு எதிராக மேன்முறையீடு செய்யும் நோக்கம் இருப்பதாக அரசுத் தரப்பு தெரிவித்துள்ளது.
இதற்கு முன்னதாக, தீவிரவாதச் சிந்தனைகளைப் பரப்புதல், பயங்கரவாதத்துடன் தொடர்புடைய குற்றங்கள் மற்றும் சிறுவர்களைத் தாக்கியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுகளிலும் மெக்கன்சி குற்றவாளியாகக் காணப்பட்டிருந்தார்.
2023 ஏப்ரல் மாதம், மனித உரிமைகள் அமைப்பொன்றின் எச்சரிக்கையைத் தொடர்ந்து, கென்யாவின் கடற்கரைப் பகுதியில் அமைந்துள்ள ஷகஹோலா வனப்பகுதியில் சுமார் 325 ஹெக்டேயர் பரப்பளவைக் கொண்ட பண்ணையிலிருந்து சிலர் மீட்கப்பட்டதை அடுத்து மெக்கன்சி கைது செய்யப்பட்டார்.
கென்யாவின் தேசிய மனித உரிமைகள் ஆணைக்குழு 2024ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 429 ஆகும். உயிரிழந்தவர்களில் சிலரின் அடையாளங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இந்தச் சம்பவம் மத அமைப்புகளைக் கட்டுப்படுத்துவதற்கான சட்டங்களை மேலும் கடுமையாக்க வேண்டும் என்ற கோரிக்கைகளையும் வலுப்படுத்தியுள்ளது. மெக்கன்சி இதற்கு முன்னரும் இரண்டு தடவைகள் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
அவர் 2003ஆம் ஆண்டு 'குட் நியூஸ் இன்டர்நஷனல்' (Good News International) என்ற தேவாலயத்தை நிறுவியதுடன், நைரோபி மற்றும் கென்யாவின் கடற்கரைப் பகுதிகளிலும் அதன் கிளைகளை அமைத்திருந்தார். இதன் மூலம் ஆயிரக்கணக்கானோர் அவரது ஆதரவாளர்களாக இணைந்திருந்தனர்.
எனினும், குறித்த தேவாலயம் 2019ஆம் ஆண்டிலேயே மூடப்பட்டுவிட்டதாக மெக்கன்சி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.