கெகிராவையில் ‘ஹஸ்தி சேனா’ நடவடிக்கை: 27 கம்பி கண்ணிகள், வேட்டைக் கருவிகள் மற்றும் இறைச்சி மீட்பு!
நாடு முழுவதும் முன்னெடுக்கப்படும் ‘ஹஸ்தி சேனா’ (Hasthi Sena) விசேட நடவடிக்கையின் கீழ், கெகிராவை – பலகல பகுதியில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின்போது 27 கம்பி கண்ணிகள், வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் ஆயுதங்கள் மற்றும் மூன்று கிலோகிராம் இறைச்சி என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
காட்டு யானைகள் உள்ளிட்ட வனவிலங்குகளைப் பாதுகாப்பதுடன், சட்டவிரோத வேட்டையாடல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுற்றாடல் அமைச்சினால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக இந்தச் சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது, ஒரு இடத்தில் இருந்து 1.5 கிலோகிராம் இறைச்சி மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. மற்றுமொரு இடத்தில் இருந்து பொறி துப்பாக்கி ஒன்றும் மேலும் 1.5 கிலோகிராம் இறைச்சியும் மீட்கப்பட்டுள்ளன.
அத்துடன், இரண்டு எரிவாயுத் துப்பாக்கிகள், பொறி துப்பாக்கிகளுக்குப் பயன்படுத்தப்படும் ஐந்து குழாய்கள் மற்றும் வெடிமருந்துகளைத் தயாரிப்பதற்குப் பயன்படுத்தப்படும் பல உபகரணங்களும் கைப்பற்றப்பட்டுள்ளன.
மேலும், மற்றுமொரு பகுதியில் வனவிலங்குகளைப் பிடிப்பதற்காகப் பொருத்தப்பட்டிருந்த 27 கம்பி கண்ணிகள் கண்டறியப்பட்டு அகற்றப்பட்டுள்ளன.
இவ்வாறான வேட்டைக் கருவிகள் வனவிலங்குகளுக்கும் அவற்றின் வாழ்விடச் சூழலுக்கும் பாரிய அச்சுறுத்தலாக அமைவதாக சுற்றாடல் அமைச்சு தெரிவித்துள்ளது.
வனவிலங்குகளைப் பாதுகாப்பதற்கும் சட்டவிரோத வேட்டையாடல் நடவடிக்கைகளைக் கட்டுப்படுத்துவதற்கும் ‘ஹஸ்தி சேனா’ திட்டத்தின் கீழ் நாடளாவிய ரீதியில் சுற்றிவளைப்புகள் மற்றும் தேடுதல் நடவடிக்கைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படும் எனவும் அமைச்சு மேலும் தெரிவித்துள்ளது.