குவைத்தில் இரு இலங்கைப் பெண்கள் மர்மமான முறையில் உயிரிழப்பு!
குவைத்தில் வெவ்வேறு பகுதிகளில் இரு இலங்கைப் பெண்கள் சடலங்களாக மீட்கப்பட்டுள்ள சம்பவங்கள் தொடர்பில் அந்நாட்டு அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.
குவைத்தின் அலி சபா அல்-சேலம் (Ali Sabah Al-Salem) மற்றும் அல்-நஹ்தா (Al-Nahda) ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள வீடுகளில் குறித்த பெண்களின் சடலங்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
முதல் சம்பவத்தில், 1988ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண் ஒருவர், அலி சபா அல்-சேலம் பகுதியில் அமைந்துள்ள வீடொன்றின் மேல் மாடியில் உள்ள பொருட்கள் சேமிப்பு அறையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
குவைத் பிரஜை ஒருவர் வழங்கிய தகவலையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்துக்குச் சென்றுள்ளனர். இதனைத் தொடர்ந்து, மரணத்திற்கான காரணத்தைக் கண்டறியும் நோக்கில் வழக்கைப் பதிவு செய்யவும், சடலத்தைப் பிரேத பரிசோதனைப் பிரிவுக்கு அனுப்பி வைக்கவும் அஹ்மதி பொது வழக்கறிஞர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
இதேவேளை, மற்றுமொரு சம்பவத்தில், 1999ஆம் ஆண்டு பிறந்த இலங்கைப் பெண் ஒருவர் அல்-நஹ்தா பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் தொடர்பில், சம்பவ இடத்தை ஆய்வு செய்து தடயங்களைச் சேகரிக்கவும், மரணத்துக்கான காரணத்தைக் கண்டறியவும் தடயவியல் நிபுணர்கள் மற்றும் குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு ஜஹ்ரா பொது வழக்கறிஞர் அலுவலகம் உத்தரவிட்டுள்ளது.
குவைத்தின் அரப் டைம்ஸ் (Arab Times) செய்தித்தாளின் தகவலின்படி, இரு மரணங்களும் சந்தேகத்திற்கிடமான மரணங்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளன. எனினும், பெண்களின் மரணத்துக்கான துல்லியமான காரணங்கள் இதுவரை உறுதிப்படுத்தப்படவில்லை.
இரு சடலங்களும் தடயவியல் பரிசோதனைகளுக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், மரணங்கள் நிகழ்ந்த சூழ்நிலைகள் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
இரு சம்பவங்களுக்கும் இடையில் ஏதேனும் தொடர்பு உள்ளதா அல்லது சந்தேகநபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனரா என்பது தொடர்பில் அதிகாரிகள் இதுவரை எந்தவொரு தகவலையும் வெளியிடவில்லை.