காவன்திஸ்ஸ யானையின் மரணம் குறித்து விசாரணை நடத்தக் கோரி சபாநாயகரிடம் எதிர்க்கட்சி முன்மொழிவு!
இலங்கையின் பிரபல யானையான காவன்திஸ்ஸவின் மரணம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக, விசேட நாடாளுமன்றத் தெரிவுக்குழுவொன்றை நியமிக்குமாறு கோரி எதிர்க்கட்சியினரால் முன்மொழிவொன்று சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களால் கையொப்பமிடப்பட்ட இந்த முன்மொழிவு, இன்று (23) சபாநாயகர் ஜகத் விக்ரமரத்னவிடம் கையளிக்கப்பட்டது.
காவன்திஸ்ஸ யானையின் மரணத்துக்குப் பின்னணியில் உள்ள சம்பவங்களை வெளிக்கொணர்வது, சம்பந்தப்பட்ட தரப்பினர் தமது பொறுப்புகளை முறையாக நிறைவேற்றினார்களா என்பதை ஆராய்வது மற்றும் இலங்கையின் தேசிய இயற்கை மரபுரிமையின் ஓர் அங்கமாகக் கருதப்பட்ட அந்த யானைக்கு நீதி கிடைப்பதை உறுதிப்படுத்துவது ஆகியன இந்தத் தெரிவுக்குழுவின் முக்கிய நோக்கங்களாகும் என எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது.
இதன்போது கருத்துத் தெரிவித்த எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பில் உரிய விசாரணை நடத்தப்படுவதுடன், நாட்டில் எஞ்சியுள்ள யானைகளையும் பாதுகாப்பதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டுமென வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் அரசியல் தலையீடுகளுக்கு அப்பால், சுயாதீனமாகக் கையாளப்பட வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், முன்மொழியப்பட்ட தெரிவுக்குழுவின் இணைத் தலைமைப் பொறுப்பை அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சியைச் சேர்ந்த பிரதிநிதிகள் இணைந்து ஏற்க வேண்டும் எனவும் சஜித் பிரேமதாச முன்மொழிந்தார்.
நாடாளுமன்றத்தின் காலநிலை மாற்றம் தொடர்பான குழு அரசாங்கம் மற்றும் எதிர்க்கட்சிப் பிரதிநிதிகளின் இணைத் தலைமையில் இயங்குவதைச் சுட்டிக்காட்டிய அவர், அதேபோன்ற இருதரப்பு அணுகுமுறையை காவன்திஸ்ஸ யானையின் மரணம் தொடர்பான விசாரணையிலும் பின்பற்ற முடியும் எனத் தெரிவித்தார்.