கல்லறை திருநாள்: தேவாலயங்களில் சிறப்பு திருப்பலி; கல்லறைகளில் மலர் தூவி உறவினர்கள் அஞ்சலி
கல்லறை திருநாளை முன்னிட்டு சென்னையில் உள்ள கிறிஸ்தவ தேவாலயங்கள் மற்றும் கல்லறைத் தோட்டங்களில் இன்று (நவம்பர் 2) சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. இதையொட்டி, ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பம் குடும்பமாகக் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்று, மறைந்த தங்களது உறவினர்களின் கல்லறைகளில் மலர் தூவி, மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.
கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 2ஆம் திகதியை அனைத்து ஆன்மாக்கள் தினமாக அனுசரிக்கின்றனர். இது கல்லறை திருநாள் என்றும் அழைக்கப்படுகிறது. இந்நாளில், உயிரிழந்து அடக்கம் செய்யப்பட்டுள்ள பெற்றோர், உடன்பிறப்புகள், உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து, வர்ணம் பூசி, மலர்களால் அலங்கரித்து குடும்பத்தினருடன் இணைந்து பிரார்த்தனை செய்வது வழக்கமாகும்.
மேலும், மறைந்தவர்களின் நினைவாக அவர்களுக்குப் பிடித்தமான உணவுகளை ஏழை எளியவர்களுக்கு வழங்குவதுடன், கல்லறைத் தோட்டங்களில் சிறப்பு ஆராதனைகளும் நடத்தப்படுகின்றன.
அந்த வகையில், சென்னையில் உள்ள அனைத்து கிறிஸ்தவ தேவாலயங்களிலும் இன்று காலை சிறப்பு ஆராதனைகள் நடைபெற்றன. குறிப்பாக, கத்தோலிக்க தேவாலயங்களில் மறைந்தவர்களின் ஆன்மா இளைப்பாற வேண்டி சிறப்புத் திருப்பலிகள் ஒப்புக்கொடுக்கப்பட்டன. தொடர்ந்து, பாதிரியார்கள் கல்லறைத் தோட்டங்களுக்குச் சென்று கல்லறைகளில் புனித நீர் தெளித்து ஆசீர்வதித்து பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் எதிரே அமைந்துள்ள பழமையான செயின்ட் மேரீஸ் கல்லறைத் தோட்டம், செயின்ட் பேட்ரிக் கல்லறைத் தோட்டம், கீழ்ப்பாக்கம் கல்லறைத் தோட்டம், சாந்தோம் கியூபிள் ஐலண்ட் கல்லறைத் தோட்டம், காசிமேடு கல்லறைத் தோட்டம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் காலை 6 மணி முதல் மாலை வரை சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.
இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குடும்பத்துடன் கலந்துகொண்டு, தங்களது மறைந்த உறவினர்கள் மற்றும் நண்பர்களின் கல்லறைகளைச் சுத்தம் செய்து மலர்களால் அலங்கரித்தனர். அத்துடன், மெழுகுவர்த்திகளை ஏற்றி உருக்கத்துடன் பிரார்த்தனை செய்ததுடன், மறைந்தவர்களின் நினைவாக ஏழை எளியவர்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் ஆடைகளையும் வழங்கினர்.
இதேபோன்று, சென்னை புறநகர்ப் பகுதிகளிலும் கல்லறை திருநாள் அனுசரிக்கப்பட்டது. மறைமலைநகர் புனித விண்ணரசி அன்னை ஆலயம், காட்டாங்குளத்தூர் புனித லூர்து அன்னை ஆலயம், ரயில் நகர் புனித அந்தோணியார் ஆலயம், பேரமனூர் எம்டிசி நகர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயம் உள்ளிட்ட தேவாலயங்களில் சிறப்புத் திருப்பலிகள் நடைபெற்றதுடன், அங்குள்ள கல்லறைத் தோட்டங்களும் ஆசீர்வதிக்கப்பட்டன.
மறைமலைநகர் புனித விண்ணரசி அன்னை ஆலயத்தில் பங்குத்தந்தை அலெக்சீஸ் மனோகர் தலைமையில் நடைபெற்ற சிறப்புத் திருப்பலியில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்று, மறைந்த தங்களது உறவினர்களின் ஆன்மா சாந்தியடையப் பிரார்த்தனை செய்தனர்.