கட்டுநாயக்க விமான நிலையத்தில் ரூ. 58.5 இலட்சம் பெறுமதியான சிகரெட்டுகள் பறிமுதல்!
கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) சுங்க வரி செலுத்தாமல் நாட்டுக்குள் கொண்டுவர முயற்சித்ததாகக் கூறப்படும் 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகளை இலங்கை சுங்க அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
கடந்த 2026 ஒக்டோபர் 22ஆம் திகதி, விமான நிலையத்தின் வருகைப் பகுதியில் அமைந்துள்ள பசுமை வழித்தடத்தின் (Green Channel) ஊடாகச் சென்றுகொண்டிருந்த 38 மற்றும் 41 வயதுடைய இரண்டு வெளிநாட்டுப் பிரஜைகளிடமிருந்தே இந்தச் சிகரெட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.
சுங்க அதிகாரிகள் மற்றும் சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவினர் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இவர்கள் பிடிபட்டுள்ளனர்.
இருவரும் தொழில் நிறுவனங்களில் பணியாற்றுபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், மலேசியாவிலிருந்து வந்த AK 47 என்ற விமானம் மூலம் இரவு சுமார் 10.01 மணியளவில் நாட்டை வந்தடைந்துள்ளனர்.
இதன்போது, அவர்கள் கொண்டுவந்த இரண்டு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 195 பெட்டிகளில் அடங்கிய 39,000 வெளிநாட்டு சிகரெட்டுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
கைப்பற்றப்பட்ட சிகரெட்டுகளின் மொத்த பெறுமதி சுமார் 5.85 மில்லியன் ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.
சுங்க விசாரணைகள் மற்றும் சட்ட நடவடிக்கைகளைத் தொடர்ந்து, குறித்த சிகரெட் தொகுதி முழுவதையும் அரசுடைமையாக்கி பறிமுதல் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.