கட்டாய SLS சான்று முத்திரையின்றி மீன் ரின் விற்பனை: ஐவருக்கு ரூ.110,000 அபராதம்
கட்டாய SLS 591 தரச்சான்று முத்திரையின்றி மீன் ரின் வகைகளை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியமை, களஞ்சியப்படுத்தியமை, உற்பத்தி செய்தமை மற்றும் விநியோகித்தமை தொடர்பில் ஐந்து பிரதிவாதிகளுக்கு மொத்தம் 110,000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தினால் இந்த அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாக நுகர்வோர் விவகார அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதன்படி, குறித்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளர் மற்றும் அதன் இரண்டு அதிகாரிகளுக்கு இணைந்து 90,000 ரூபாய் அபராதமும், மீன் ரின் உற்பத்தி நிறுவனத்திற்கும் அதன் முகாமைத்துவப் பணிப்பாளருக்கும் இணைந்து 20,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2026 ஆகஸ்ட் 11ஆம் திகதி கொழும்பிலுள்ள பல்பொருள் அங்காடி ஒன்றில் நுகர்வோர் விவகார அதிகார சபையின் அதிகாரிகள் மேற்கொண்ட சோதனையின்போதே இந்த முறைகேடு கண்டறியப்பட்டுள்ளது.
இதன்போது, கட்டாய SLS 591 தரச்சான்று முத்திரையின்றி, தலா 185 கிராம் நிறையுடைய 87 மீன் ரின்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.
அவற்றில் சூரியகாந்தி எண்ணெய் கலந்த 64 மீன் ரின்களும், ஒலிவ் எண்ணெய் கலந்த 23 மீன் ரின்களும் அடங்கியிருந்தன.
குறித்த மீன் ரின்களில் 32 விற்பனைக்காகக் காட்சிப்படுத்தப்பட்டிருந்ததுடன், ஏனைய 55 மீன் ரின்களும் களஞ்சியத்தில் வைக்கப்பட்டிருந்தமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதனையடுத்து, உரிய தரச்சான்று முத்திரையின்றி மீன் ரின்களை விற்பனைக்காகக் காட்சிப்படுத்தியமை, களஞ்சியப்படுத்தியமை, உற்பத்தி செய்தமை மற்றும் விநியோகித்தமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றம், ஐந்து பிரதிவாதிகளுக்கும் மொத்தமாக 110,000 ரூபாய் அபராதம் விதித்து உத்தரவிட்டுள்ளது.