ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தாதது ஏன்? – அரசாங்கத்திடம் நாமல் ராஜபக்ஷ கேள்வி!
2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டுள்ள திட்டங்களை நடைமுறைப்படுத்துவதிலும், நாட்டின் பொருளாதாரத்தை நிர்வகிப்பதிலும் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நடைபெற்ற 2027ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட விவாதத்தில் உரையாற்றிய அவர், வாழ்க்கைச் செலவு அதிகரிப்பு, வெளிநாட்டு முதலீடுகள் மற்றும் ஏற்கனவே ஒதுக்கப்பட்ட அரச நிதிகள் முழுமையாகப் பயன்படுத்தப்படாமை உள்ளிட்ட விடயங்கள் தொடர்பில் கேள்விகளை எழுப்பினார்.
அரசாங்கத்தின் வரிக் கொள்கைகள் சாதாரண மக்களுக்கு தொடர்ந்து பெரும் சுமையை ஏற்படுத்தி வருவதாகக் குறிப்பிட்ட நாமல் ராஜபக்ஷ, பால்மா மற்றும் மருந்துப் பொருட்கள் போன்ற அத்தியாவசியப் பொருட்களின் விலைகளைக் குறைப்பதற்கு போதிய நிவாரணங்கள் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டினார்.
வெளிநாட்டு முதலீடுகள் தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்தியாவின் அதானி குழுமம், சீனாவின் China Merchants நிறுவனம் மற்றும் ஜப்பானிய முதலீட்டாளர்களுடன் தொடர்புடைய துறைமுக மற்றும் கப்பல் கட்டுமானத் திட்டங்களின் தற்போதைய நிலை குறித்தும் கேள்வி எழுப்பினார்.
ஏற்கனவே முதலீடுகளை மேற்கொண்டுள்ள நிறுவனங்களுக்கு ஆதரவளிப்பதற்குப் பதிலாக, அரசாங்கத்தின் முதலீட்டு ஊக்குவிப்புக் கொள்கைகள் மேலதிக நிர்வாகத் தடைகளை உருவாக்குகின்றனவா என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
மேலும், புதிய நிர்வாகப் பிரிவுகளை உருவாக்குவதற்குப் பதிலாக, ஏற்கனவே உள்ள நிறுவனங்களைப் பலப்படுத்துவதன் மூலம் முதலீடுகளை ஈர்ப்பதற்கும் அபிவிருத்தித் திட்டங்களைச் சிறப்பாக நடைமுறைப்படுத்துவதற்கும் முடியும் எனவும் அவர் தெரிவித்தார்.
இதற்கிடையில், விளையாட்டு, விவசாயம் மற்றும் அனர்த்த முகாமைத்துவம் உள்ளிட்ட துறைகளுக்குப் பொறுப்பான பல அமைச்சுக்கள், கடந்தகால வரவு செலவுத் திட்டங்கள் மூலம் ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாகப் பயன்படுத்தத் தவறியுள்ளதாகவும் நாமல் ராஜபக்ஷ குற்றஞ்சாட்டினார்.
குறிப்பாக, அனர்த்த நிவாரணம் மற்றும் உட்கட்டமைப்பு அபிவிருத்திக்காக ஒதுக்கப்பட்ட கணிசமான நிதி, திட்டங்களை நடைமுறைப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதங்கள் மற்றும் நிர்வாகச் சிக்கல்கள் காரணமாகப் பயன்படுத்தப்படாமல் எஞ்சியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
நிதி ஒதுக்கீடுகளை முழுமையாகப் பயன்படுத்தாமல் எஞ்சியிருப்பதை வீண் விரயங்களைக் குறைத்ததன் மூலம் கிடைத்த சேமிப்பாக அரசாங்கம் சித்தரிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.
ஆனால், அவ்வாறு பயன்படுத்தப்படாமல் எஞ்சியுள்ள நிதி, திட்டமிட்ட அபிவிருத்தி வேலைத்திட்டங்களைச் செயற்படுத்துவதில் அரசாங்கம் எதிர்கொள்ளும் தோல்விகளையே பிரதிபலிக்கக்கூடும் என்றும் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.