எஹெலியகொடையில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு – சந்தேகநபர் காயம்
எஹெலியகொடை, பரகடுவை அங்குருவாங்குவ பகுதியில் திருடப்பட்டதாகக் கூறப்படும் வேனில் தப்பிச் செல்ல முயன்றவர்களைப் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தி தடுத்து நிறுத்தியதில் சந்தேகநபர் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இந்தச் சம்பவம் இன்று (28) இடம்பெற்றுள்ளது.
வேன் ஒன்றைத் திருடிச் செல்வதாக அதன் உரிமையாளர் இன்று காலை அவிசாவளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதனையடுத்து, அப்பகுதியில் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டதுடன், குறித்த வாகனத்தை இடைமறிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. எனினும், வேனில் பயணித்தவர்கள் நிறுத்தாமல் தொடர்ந்து பயணித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் மேற்கொண்ட துரத்தல் நடவடிக்கையைத் தொடர்ந்து, பரகடுவ பகுதியில் வேன் இடைமறிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, சந்தேகநபர் ஒருவர் தப்பிச் சென்றுள்ளதுடன், மற்றைய சந்தேகநபர் பொலிஸாரைத் தாக்கிவிட்டு தப்பிச் செல்ல முயன்றதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இதனையடுத்து, அவரைக் கைது செய்யும் நோக்கில் பொலிஸார் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர். இதில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தப்பிச் சென்ற மற்றைய சந்தேகநபரைக் கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.