உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சாதனை!
இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் ஏற்பட்டுள்ள அபார வளர்ச்சி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியாவின் பொருளாதாரம் வேகமாக வளர்ச்சியடைந்து வரும் நிலையில், மின்சாரத்திற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் இந்தியாவின் உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) 7.8 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. இதன் காரணமாக தொழிற்சாலைகள், வர்த்தக நிறுவனங்கள் மற்றும் வீடுகளுக்கான மின்சாரத் தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் மின்சாரத் தேவை 6 சதவீதத்தால் அதிகரித்துள்ளது. இந்திய மத்திய மின்சார ஆணையத்தின் கணிப்பின்படி, 2035-36ஆம் ஆண்டளவில் நாட்டின் உச்சபட்ச மின்சாரத் தேவை 459 ஜிகாவாட்டை எட்டக்கூடும்.
இந்நிலையில், இந்தியாவின் மின்சார உற்பத்தியில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. பிரதமர் நரேந்திர மோடி, குஜராத் மாநில முதலமைச்சராகப் பதவி வகித்த காலத்திலிருந்தே சூரிய மின்சக்திக்கு முக்கியத்துவம் அளித்து வந்ததுடன், நீண்டகால எரிசக்தி மேம்பாட்டு உத்தியை முன்னெடுத்து வருகிறார்.
இதன் ஒரு பகுதியாக, புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளங்கள் அதிகமுள்ள பிராந்தியங்களிலிருந்து மின்சாரத் தேவை அதிகமுள்ள பகுதிகளுக்கு மின்சாரத்தைக் கொண்டு செல்வதற்காக 'பசுமை எரிசக்தி வழித்தடம்' (Green Energy Corridor) திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இத்திட்டத்தின் மூன்றாம் கட்டமாக, மின்சாரச் சேமிப்பு மற்றும் மின் பரிமாற்றக் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்காக 19.3 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடு அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் மேலும் 135 ஜிகாவாட் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தியை மின்சாரக் கட்டமைப்புடன் இணைக்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கடந்த மே மாதம் வடக்கு மற்றும் மத்திய இந்தியாவில் கடும் வெப்பநிலை நிலவியபோது, நாட்டின் உச்சபட்ச மின்சாரத் தேவை 271 ஜிகாவாட்டாக அதிகரித்து புதிய சாதனை படைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தில், மொத்த மின்சாரத் தேவையில் மூன்றில் ஒரு பங்கிற்கு அண்மித்த அளவைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் இந்தியா பூர்த்தி செய்திருந்தது.
இதன் காரணமாக, கடும் வெப்பத்திலும் வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களுக்கான மின்சார விநியோகத்தைத் தொடர்ந்து பேண முடிந்தது. ஒரு தசாப்தத்திற்கு முன்னர் இதுபோன்ற மின்சாரத் தேவை அதிகரிப்பு இந்தியாவின் மின்சாரக் கட்டமைப்புக்கு பெரும் அழுத்தத்தை ஏற்படுத்தியிருக்கும். ஆனால், தற்போது தூய்மையான எரிசக்தி உற்பத்தியில் நிர்ணயிக்கப்பட்ட இலக்குகளை ஐந்து ஆண்டுகளுக்கு முன்னதாகவே எட்டியுள்ளதால், மின்சாரத் தேவையைச் சமாளிக்கும் திறன் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவைப் போன்ற அளவில் இந்தியாவும் தனது மின்சாரத்தின் கணிசமான பங்கைப் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி மூலம் உற்பத்தி செய்து வருகிறது. மின்சாரச் சேமிப்புக் கட்டமைப்புடன் இணைக்கப்பட்டு 24 மணிநேரமும் விநியோகிக்கக்கூடிய புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் செலவு ஒரு கிலோவாட் மணித்தியாலத்திற்கு சுமார் 5.2 இந்திய ரூபாயாகக் குறைந்துள்ளது. புதிய மின்சார உற்பத்தி முறைகளில் இதுவே குறைந்த செலவுடையதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதற்கிடையில், 2024ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட பிரதமரின் 'சூரிய வீடு' (PM Surya Ghar) திட்டத்தின் கீழ், 2027 மார்ச் மாதத்திற்குள் ஒரு கோடி வீடுகளின் கூரைகளில் சூரிய மின்கலங்களைப் பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவரை 60 இலட்சத்திற்கும் அதிகமான வீடுகளில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் மூலம் மின்சாரக் கட்டமைப்பின் நம்பகத்தன்மை அதிகரிப்பதுடன், குடும்பங்களின் மின்சாரச் செலவுகளும் குறைந்துள்ளன. கூரை சூரிய மின்சக்தி அமைப்புகளைப் பொருத்திய பின்னர், குறைந்தது ஒரு மின்கட்டணக் காலப்பகுதியிலாவது 21 இலட்சம் குடும்பங்கள் பூஜ்ஜிய மின்சாரக் கட்டணத்தைப் பெற்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மறுபுறம், இந்தியாவில் சூரிய மின்சக்தி உற்பத்தித் திறன் கடந்த பத்து ஆண்டுகளில் சுமார் 20 மடங்காக அதிகரித்துள்ளது. இதன் மூலம் உலகின் மூன்றாவது பெரிய புதுப்பிக்கத்தக்க எரிசக்திச் சந்தையாக இந்தியா உருவெடுத்துள்ளது.
அத்துடன், இத்துறையில் முதலீட்டாளர்கள், உற்பத்தியாளர்கள், நிதி நிறுவனங்கள் மற்றும் சேவை நிறுவனங்களை உள்ளடக்கிய உள்நாட்டு வலையமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால் புதிய வேலைவாய்ப்புகள் உருவாகுவதுடன், வெளிநாட்டு முதலீடுகளும் அதிகரித்துள்ளன.
புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் வளர்ந்து வரும் பொருளாதார நாடுகளுக்கான முதலீட்டு வாய்ப்புகளை மதிப்பிடும் BloombergNEF நிறுவனத்தின் ClimateScope தரவரிசையில், தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக இந்தியா முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்தியாவில் சூரிய மின்சக்தி வளர்ச்சியை ஊக்குவிப்பதில் Bloomberg Philanthropies அமைப்பும் முக்கிய பங்காற்றியுள்ளது. இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சுடன் இணைந்து, செயற்கைக்கோள் தரவுகளைப் பயன்படுத்தி 120 நகரங்களில் கூரை சூரிய மின்சக்திக்கான வாய்ப்புகள் அடையாளம் காணப்பட்டுள்ளன.
மேலும், சுமார் 9,500 விற்பனையாளர்கள் மற்றும் நிறுவுநர்களுக்குப் பயிற்சி வழங்கப்பட்டுள்ளதுடன், விழிப்புணர்வு நடவடிக்கைகள் மூலம் சுமார் 14 இலட்சம் மக்களைச் சென்றடைந்துள்ளது.
முன்னதாக, ஒரு இலட்சம் வீடுகளின் கூரைகளில் சூரிய மின்சக்தி அமைப்புகளைப் பொருத்துவதற்கு 118 நாட்கள் தேவைப்பட்ட நிலையில், இந்தத் திட்டத்தின் மூலம் தற்போது ஆறு நாட்களிலேயே அந்தப் பணியை நிறைவு செய்ய முடிகிறது.
அரசாங்கம், தனியார் துறை, தொண்டு நிறுவனங்கள் மற்றும் சிவில் சமூக அமைப்புகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் காரணமாக இந்தியாவில் மின்சாரக் கட்டணங்களைக் குறைக்கவும், காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்தவும், வேலைவாய்ப்புகளை உருவாக்கவும் முடிந்துள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தித் துறையில் சுமார் 13 இலட்சம் பேர் வேலைவாய்ப்பைப் பெற்றுள்ளனர். எதிர்காலத்தில் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னர் மின்சார உற்பத்திக்காக நிலக்கரியையே பெரிதும் நம்பியிருந்த இந்தியாவில், தற்போது தூய்மையான எரிசக்தி முக்கியத்துவம் பெற்றுள்ளது. நிலக்கரி இன்னமும் நாட்டின் எரிசக்திக் கலவையில் ஒரு பகுதியாக இருந்தாலும், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி குறைந்த செலவிலும் விரைவாகவும் முன்னெடுக்கக்கூடியதாக மாறியுள்ளது.
பொருளாதார வளர்ச்சி, எரிசக்திப் பாதுகாப்பு மற்றும் பொதுமக்களின் சுகாதாரம் ஆகியவற்றைக் கருத்திற்கொண்டே இந்தியா இந்த மாற்றத்தை முன்னெடுத்து வருவதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.
அதிகரித்து வரும் மின்சாரத் தேவை, நம்பகத்தன்மையற்ற மின்சாரக் கட்டமைப்பு மற்றும் குறைந்த செலவில் மின்சாரத்தைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சவால்கள் போன்ற பிரச்சினைகளை உலகின் பல நாடுகள் எதிர்கொண்டு வருகின்றன.
இத்தகைய நாடுகளுக்கு இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி வளர்ச்சி ஒரு வழிகாட்டியாக அமையக்கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தக் கட்டுரையை Bloomberg L.P. மற்றும் Bloomberg Philanthropies நிறுவனங்களின் நிறுவனர் மைக்கல் ஆர். புளூம்பேர்க் மற்றும் இந்தியாவின் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர் பிரல்ஹாத் வெங்கடேஷ் ஜோஷி ஆகியோர் இணைந்து எழுதியுள்ளனர். இதில் வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அவர்களின் தனிப்பட்ட கருத்துக்கள் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.