இலவச பாடசாலை உணவுத் திட்டத்தின் தரம் குறித்து கவலை
பாடசாலை மாணவர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பில் கவலைகள் எழுப்பப்பட்டுள்ளன.
கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் இந்த விடயம் குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறித்த உணவுத் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக வெளியிடப்பட்டுள்ள வழிகாட்டுதல்கள் முறையாகப் பின்பற்றப்படாமை மற்றும் மாணவர்களுக்கு வழங்கப்படும் உணவுகளின் தரம் தொடர்பில் எழுந்துள்ள குறைபாடுகள் குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
பிரதமரும் கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற இந்தக் கூட்டத்திலேயே இவ்விடயங்கள் ஆராயப்பட்டுள்ளன.
இதன்போது, ஆசிரியர்களின் இடமாற்றம், பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் மற்றும் முன்பள்ளிக் கல்வியைக் கண்காணிப்பதில் காணப்படும் குறைபாடுகள் உள்ளிட்ட கல்வித்துறையைப் பாதிக்கும் பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டுள்ளன.
இந்தக் கூட்டத்தில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட கல்வித்துறையுடன் தொடர்புடைய பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.