இலங்கையில் பெரியவர்களில் 15 வீதமானோருக்கு நீரிழிவு; பாதிக்கப்பட்டவர்களில் 40 வீதமானோருக்கு நோய் இருப்பது தெரியாது!
இலங்கையின் வயது வந்தோரில் சுமார் 15 வீதமானோர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அவர்களில் சுமார் 40 வீதமானோர் தங்களுக்கு இந்நோய் இருப்பதை அறியாமல் வாழ்வதாகவும் மருத்துவ நிபுணர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
உலக நீரிழிவு தினம் இன்று (நவம்பர் 14) அனுஷ்டிக்கப்படும் நிலையில், இலங்கையின் நீரிழிவு நோய் நிலைமை தொடர்பில் இந்தத் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இலங்கை நீரிழிவு சங்கத்தின் தலைவரும், கொழும்பு தேசிய வைத்தியசாலையின் ஆலோசனை நாளமில்லாச் சுரப்பியல் நிபுணருமான வைத்தியர் மணில்க சுமனதிலக்க இதனைத் தெரிவித்துள்ளார்.
நீரிழிவு நோய் நாட்டில் அதிகரித்து வரும் தீவிரமான பொது சுகாதாரப் பிரச்சினையாக மாறியுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
கொழும்பு மாவட்டத்தில் நிலைமை மேலும் கவலைக்குரியதாக உள்ளதாகவும், அங்கு நான்கு பேரில் ஒருவர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், சிறுவர்களிடையே அதிகரித்து வரும் உடல் பருமன் எதிர்காலத்தில் இளம் வயதினரிடையே இரண்டாம் வகை நீரிழிவு நோய் ஏற்படுவதற்கான அபாயத்தை அதிகரிக்கக்கூடும் எனவும் அவர் எச்சரித்துள்ளார்.
இதனைக் கட்டுப்படுத்த ஆரோக்கியமான உணவுப் பழக்கவழக்கங்கள் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கை முறையைப் பின்பற்றுவது அவசியம் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
சர்வதேச நீரிழிவு சம்மேளனத்தின் (IDF) மதிப்பீட்டின்படி, 2024ஆம் ஆண்டில் இலங்கையில் 20 முதல் 79 வயதுக்குட்பட்ட சுமார் 16 இலட்சம் பேர் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருந்தனர்.
அவர்களில் சுமார் 6 இலட்சத்து 3 ஆயிரம் பேர், அதாவது 37.7 வீதமானோர் தங்களுக்கு நீரிழிவு நோய் இருப்பது கண்டறியப்படாத நிலையில் இருந்ததாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உடலில் போதியளவு இன்சுலின் சுரக்காதபோது அல்லது சுரக்கப்படும் இன்சுலினை உடலால் முறையாகப் பயன்படுத்த முடியாதபோது நீரிழிவு நோய் ஏற்படுகிறது. இதனால் இரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்கிறது.
நீரிழிவு நோயை உரிய முறையில் கட்டுப்படுத்தாவிட்டால் இதய நோய், பக்கவாதம், சிறுநீரகச் செயலிழப்பு, பார்வை இழப்பு, நரம்புப் பாதிப்பு மற்றும் கால்களை அகற்ற வேண்டிய நிலை உள்ளிட்ட பல்வேறு கடுமையான பாதிப்புகள் ஏற்படக்கூடும்.