இலங்கையின் கடன் தரப்படுத்தலை மீண்டும் B+ நிலைக்கு உயர்த்த முடியும் – அரசாங்கம் நம்பிக்கை!
சர்வதேச அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதார அடிப்படைகள் வலுப்பெற்றுள்ளதாகவும், நாட்டின் கடன் தரப்படுத்தலை முன்னர் இருந்த B+ நிலைக்கு மீண்டும் உயர்த்த முடியும் என நம்புவதாகவும் அரசாங்கம் தெரிவித்துள்ளது.
S&P Global Ratings நிறுவனம் இலங்கையின் கடன் தரப்படுத்தலை அண்மையில் உயர்த்தியுள்ள நிலையில், நிதி அமைச்சின் செயலாளர் ஹர்ஷன சூரியப்பெரும இன்று (28) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
மத்திய கிழக்கில் நிலவும் மோதல் உள்ளிட்ட சர்வதேச சவால்களுக்கு மத்தியிலும் இலங்கையின் பொருளாதாரம் சிறப்பாக நிர்வகிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குறிப்பாக, எரிபொருள் இறக்குமதிக்கான செலவு வழமையான செலவினத்துடன் ஒப்பிடுகையில் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளதாகவும், வாகன இறக்குமதிகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டதன் காரணமாக சுமார் 4 பில்லியன் அமெரிக்க டொலர் இறக்குமதிச் செலவு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இத்தகைய பொருளாதார அழுத்தங்களுக்கு மத்தியிலும் இலங்கையின் கடன் தரப்படுத்தல் உயர்த்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், அரசாங்கக் கடன் அதிகரித்த வேகத்தைவிட பொருளாதார வளர்ச்சி வேகமாக முன்னேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் கடன் தரப்படுத்தலை முன்னைய நிலைக்கு மீண்டும் கொண்டுவருவதுடன், பொருளாதாரத்தை மேலும் வலுப்படுத்துவதே அரசாங்கத்தின் இலக்கு எனவும் அவர் கூறியுள்ளார்.
எனினும், புவிசார் அரசியல் நிலைமைகள் மற்றும் காலநிலை மாற்றத்தால் ஏற்படும் அனர்த்தங்கள் உள்ளிட்ட வெளிப்புற நிச்சயமற்ற தன்மைகள் காரணமாக, இந்த இலக்கை அடைவதற்கான காலக்கெடுவைத் தற்போது குறிப்பிட முடியாது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, அரசாங்கத்தின் வருமானத்தில் வட்டிச் செலவினங்களுக்காக சுமார் 40 சதவீதம் ஒதுக்கப்படுவதாக S&P நிறுவனம் மதிப்பிட்டுள்ளமை தொடர்பில் கருத்துத் தெரிவித்த அவர், இந்த விகிதம் முன்னர் சுமார் 80 சதவீதமாகக் காணப்பட்டதாகவும், தற்போது படிப்படியாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், குறுகிய காலக் கடன்களைச் சார்ந்திருப்பதைக் குறைத்து, நீண்டகாலக் கடன்களை நோக்கி அரசாங்கம் நகர்ந்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதன் மூலம் கடன்களைத் திருப்பிச் செலுத்துவதற்கான சராசரிக் காலம் ஆறு ஆண்டுகளிலிருந்து எட்டு ஆண்டுகளாக நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறுகியகால உள்நாட்டுக் கடன்களில் தங்கியிருப்பதைக் குறைத்தல், கடன் முதிர்வுக் காலத்தை நீடித்தல் மற்றும் வெளிநாட்டு நாணயக் கடன்களின் மீதான சார்பைக் குறைத்தல் ஆகியன அரசாங்கத்தின் நிதி முகாமைத்துவ உத்தியின் முக்கிய அம்சங்களாக உள்ளதாகவும் நிதி அமைச்சின் செயலாளர் மேலும் தெரிவித்துள்ளார்.