"இந்தியாவிற்கு வருக எலோன், மற்றவரை சந்திக்கும் வரை காத்திருங்கள்": ராகுல் காந்தி கருத்து!
ஸ்டாா்பிங் செயற்கைக்கோள் இணைய சேவைக்கு இந்தியாவில் வர்த்தக ரீதியான அனுமதி கிடைப்பதில் ஏற்பட்டுள்ள தாமதம் தொடர்பாக, டெஸ்லா (Tesla) மற்றும் ஸ்பேஸ்எக்ஸ் (SpaceX) நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரி எலோன் மஸ்க் மற்றும் இந்திய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆகியோருக்கு இடையே சமூக வலைத்தளத்தில் சுவாரசியமான கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றுள்ளது.
இந்தியாவில் தனது சேவையைத் தொடங்குவதற்கான அனுமதி வழங்கும் நடைமுறைகள் குறித்து அதிருப்தி வெளியிட்ட எலோன் மஸ்க், "இந்தியாவின் உண்மையான முதலாளி பில்லியனர் தொழிலதிபர் முகேஷ் அம்பானியா?" என வினா எழுப்பியிருந்தார்.
இதற்குப் பதிலளிக்கும் வகையில் எக்ஸ் (X) தளத்தில் பதிவொன்றை வெளியிட்ட காங்கிரஸ் கட்சியின் சிரேஷ்ட தலைவரான ராகுல் காந்தி, "இந்தியாவிற்கு வருக எலோன். மற்றவரை (நரேந்திர மோடி) நீங்கள் கண்டறியும் வரை காத்திருங்கள்" எனத் தெரிவித்திருந்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பதிவிற்குப் பதிலளித்த எலோன் மஸ்க், "நன்றி ராகுல். இது உண்மையில் கவலைக்குரிய செய்திதான்" எனக் குறிப்பிட்டுள்ளார்.
இக்கருத்துப் பரிமாற்றமானது, இந்தியாவின் தொலைத்தொடர்புத் துறையில் முன்னணி வணிகக் குழுமங்களின் ஆதிக்கம் குறித்தும், இந்தியச் சந்தையில் நுழைய முயலும் வெளிநாட்டு நிறுவனங்கள் எதிர்கொள்ளும் கட்டுப்பாட்டு மற்றும் ஒழுங்குமுறைச் சவால்கள் குறித்தும் சர்வதேச ரீதியில் கவனத்தை ஈர்த்துள்ளது.
எனினும், சக்திவாய்ந்த உள்நாட்டு வணிகக் குழுமங்கள் ஸ்டாா்பிங்கின் வருகையைத் தடுக்கின்றன என்ற குற்றச்சாட்டுகளை இந்திய அரசாங்கம் முற்றாக மறுத்துள்ளது. வர்த்தக ரீதியான சேவைகளைத் தொடங்குவதற்கு முன்னர் செயற்கைக்கோள் சேவை வழங்கும் நிறுவனங்கள் கட்டாயப் பாதுகாப்பு மதிப்பீடுகளை நிறைவு செய்ய வேண்டும் என மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
உலகின் மிகப்பெரிய தொலைத்தொடர்புச் சந்தைகளில் ஒன்றான இந்தியாவில் தனது வணிகத்தை விரிவுபடுத்த ஸ்பேஸ்எக்ஸ் நிறுவனத்தின் ஸ்டாா்பிங் தீவிர முயற்சியில் ஈடுபட்டு வருகின்றது.
இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள இந்தியத் தொலைத்தொடர்பு அமைச்சகம், ஸ்டாா்பிங், ரிலையன்ஸ் ஜியோவின் செயற்கைக்கோள் நிறுவனம் மற்றும் யூட்டல்சாட் ஒன்வெப் (Eutelsat OneWeb) ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் உரிமங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், வர்த்தக நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்னரான பாதுகாப்பு மதிப்பீடுகளும் அலைக்கற்றை (Spectrum) சார்ந்த ஒப்புதல்களுமே தற்பொழுது நிலுவையில் உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மேலும், எந்தவொரு குறிப்பிட்ட நிறுவனத்திற்கும் சாதகமாகச் செயற்படவில்லை எனக் குறிப்பிட்ட அரசாங்கம், அனைத்துச் சேவை நிறுவனங்களுக்கும் ஒரே மாதிரியான ஒழுங்குமுறை விதிகளே பின்பற்றப்படுவதாகத் தெளிவுபடுத்தியுள்ளது.