“இந்தியாவின் முதலாளி அம்பானியா?”: எலான் மஸ்க் கேள்வி
இந்தியாவில் ஸ்டார்லிங்க் (Starlink) செயற்கைக்கோள் இணையச் சேவையைத் தொடங்குவதில் நிலவிவரும் தொடர் தாமதம் காரணமாக, இந்திய மத்திய அரசு மற்றும் தொழிலதிபர் முகேஷ் அம்பானி மீது ஸ்பேஸ் எக்ஸ் (SpaceX) நிறுவனத்தின் தலைவரான எலான் மஸ்க் கடும் விமர்சனங்களை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் தனது எக்ஸ் (X) சமூக வலைத்தளப் பக்கத்தில் பதிவிட்டுள்ள அவர், “உலகின் 165-க்கும் மேற்பட்ட நாடுகளில் ஸ்டார்லிங்க் சேவைக்கான உரிமம் வழங்கப்பட்டுள்ளது. இந்திய அரசின் அனைத்து விதிமுறைகளுக்கும் சட்டங்களுக்கும் உட்பட்டு கடந்த ஐந்து ஆண்டுகளாக முயற்சிகளை மேற்கொண்டு வரும் போதிலும், எமக்கு இன்னமும் ஏன் அனுமதி வழங்கப்படவில்லை? இந்தியாவின் உண்மையான முதலாளி அம்பானிதானா?” என வினவியுள்ளார்.
தொலைதூர மற்றும் இணைய வசதியற்ற கிராமப்புற இந்தியப் பகுதிகளுக்குக் குறைந்த செலவில் அதிவேக இணையச் சேவையை வழங்குவதே ஸ்டார்லிங்க் நிறுவனத்தின் பிரதான நோக்கமாகும் என்றும், சந்தையில் ஏகபோக ஆதிக்கத்தைத் தக்கவைத்துக்கொள்ள முனையும் சில தொழிலதிபர்களின் தடையால் இந்திய மக்களுக்கே பெரும் இழப்பு ஏற்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மத்திய அமைச்சகம் மறுப்பு:
எலான் மஸ்க்கின் இந்தக் குற்றச்சாட்டுகளை இந்திய மத்திய தொலைத்தொடர்பு அமைச்சகம் முற்றிலுமாக மறுத்துள்ளது.
இது குறித்து வெளியாக்கியுள்ள அறிக்கையில், ‘இந்தியாவின் தொலைத்தொடர்பு விதிமுறைகள் அனைத்தும் வெளிப்படையானவை மற்றும் பாரபட்சமற்றவை. ஸ்டார்லிங்க், ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் ஆதரவு பெற்ற ஒன்வெப் ஆகிய மூன்று நிறுவனங்களுக்கும் முதற்கட்ட அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன.
எனினும், வணிக ரீதியிலான சேவையைத் தொடங்குவதற்கு முன்னதாக மேற்கொள்ளப்படும் உள்நாட்டுப் பாதுகாப்புத் தணிக்கை மற்றும் அலைவரிசை ஒதுக்கீட்டு நடைமுறைகள் தற்பொழுது மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனையில் உள்ளன. அனைத்து நிறுவனங்களுக்கும் இந்த விதிமுறைகள் பொதுவானதே’ என அரசு விளக்கமளித்துள்ளது.