ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் மாற்றம் – சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெறத் தீர்மானம்
இலங்கையில் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் நடைமுறைச் சிக்கல்களைக் கருத்திற்கொண்டு, தற்போதுள்ள ஆசிரியர் இடமாற்றக் கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பில் கல்வி அமைச்சின் ஆலோசனைக் குழு கவனம் செலுத்தியுள்ளது.
பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் அண்மையில் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி தொடர்பான அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்திலேயே இது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
குறிப்பாக, ஒரே பாடசாலையில் 10 வருடங்களுக்கும் மேலாகப் பணியாற்றும் ஆசிரியர்கள் எதிர்நோக்கும் சிரமங்கள் குறித்து இதன்போது விசேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
ஆசிரியர் இடமாற்ற சபையினால் நிர்ணயிக்கப்பட்டுள்ள 30 கிலோமீற்றர் தூர வரம்பு, ஹம்பாந்தோட்டை, பொலன்னறுவை மற்றும் அனுராதபுரம் போன்ற தொலைதூர மாவட்டங்களில் உள்ள பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்களுக்கு நடைமுறைச் சிக்கல்களை ஏற்படுத்துவதாகக் கூட்டத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதனையடுத்து, குறித்த தூர வரம்பை மீளாய்வு செய்யுமாறு ஆசிரியர் இடமாற்ற சபைக்கு அறிவிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதேவேளை, சில தேசிய பாடசாலைகளில் பணியாற்றும் ஆசிரியர்கள், இடமாற்றம் பெற்றுச் செல்லக்கூடிய மாற்றுத் தேசிய பாடசாலைகள் இல்லாத காரணத்தினால் இடமாற்றங்களைப் பெற்றுக்கொள்ள முடியாத நிலை குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதற்குத் தீர்வாக, ஆசிரியர் இடமாற்ற நோக்கங்களுக்காக மாத்திரம் தேசிய பாடசாலைகளுக்கும் மாகாணப் பாடசாலைகளுக்கும் இடையில் ஆசிரியர்களை இடமாற்றம் செய்வதற்கான சாத்தியக்கூறுகள் தொடர்பில் சட்டமா அதிபரின் ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும், சில பாடசாலைகள் ஆசிரியர்களின் சேவைக் காலம் தொடர்பான தகவல்களைத் துல்லியமாகச் சமர்ப்பிக்காமை மற்றும் ஆசிரியர் தரவுத்தளத்தில் காணப்படும் குறைபாடுகள் குறித்தும் இதன்போது கவலை தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய, உரிய தகவல்களை மறைப்பதாகச் சந்தேகிக்கப்படும் பாடசாலைகளில் நேரடி ஆய்வுகளை மேற்கொள்வதுடன், ஆசிரியர்களின் சேவைக் காலத்தைச் சரியாகக் கணக்கிடும் வகையில் ஆசிரியர் தரவுத்தளத்தைப் புதுப்பிப்பது குறித்தும் கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதேவேளை, வடக்கு மாகாணத்திற்கான புதிய ஆசிரியர் இடமாற்றக் கொள்கையை உருவாக்கி, தற்போதுள்ள கொள்கைக்குப் பதிலாக 2027ஆம் ஆண்டு முதல் அதனை நடைமுறைப்படுத்துவது தொடர்பிலும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இக்கூட்டத்தில் கல்வி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்ட கல்வித்துறையைச் சேர்ந்த பல்வேறு தரப்பினரும் கலந்துகொண்டனர்.