அரசியல் உறுதிமிக்க தலைமுறையை உருவாக்குகிறார் முதலமைச்சர் விஜய்: இயக்குநர் அட்லீ
தமிழக முதலமைச்சர் விஜய், அரசியலில் தெளிவும் உறுதியும் மிக்க ஒரு புதிய தலைமுறையை உருவாக்கி வருகிறார் என பிரபல திரைப்பட இயக்குநர் அட்லீ தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் சேதுபதியின் நடிப்பில் உருவாகியுள்ள ‘பத்தா’ (Patha) திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.
ஸ்டார் ஸ்டுடியோ 18 (Star Studios 18) மற்றும் அட்லீயின் ‘ஏ ஃபார் ஆப்பிள் ஸ்டுடியோஸ்’ (A for Apple Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், வரும் அக்டோபர் முதலாம் திகதி திரைக்கு வரவுள்ளது. இயக்குநர் பாலாஜி தரணிதரன் இயக்கத்தில், தந்தை - மகள் பாசப் பின்னணியில் உருவாக்கப்பட்டுள்ள இத்திரைப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இவ்விழாவில் தயாரிப்பாளராகவும் பங்கேற்று உரையாற்றிய இயக்குநர் அட்லீ, தனது திரையுலக வளர்ச்சிக்கு முதலமைச்சர் விஜய்யின் ஊக்கமும் ஆதரவுமே முக்கிய காரணம் என நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டார்.
தொடர்ந்து தற்போதைய அரசியல் விழிப்புணர்வு குறித்துப் பேசிய அவர்:
"இன்றைய காலத்தில் ஐந்து வயதுக் குழந்தைகள் கூட தங்களது வீடுகளில் இருந்தபடி சட்டமன்றத்தில் என்ன நடக்கிறது என்பதை உன்னிப்பாகக் கவனிக்கும் அளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. அரசியல் என்பது நமக்குச் சம்பந்தமில்லாத ஒன்று என இனி யாரும் ஒதுங்கிவிட முடியாது. எந்தக் கருத்தையும் யார் மீதும் திணிக்க முடியாது என்ற தெளிவு தற்போதைய இளைய தலைமுறைக்கு இருக்கிறது.
அரசியல் குறித்துப் பேசுவதோ அல்லது அதில் நேரடியாகக் ஈடுபடுவதோ எனது நோக்கமல்ல. இருப்பினும், சமுதாயத்தில் நேர்மறையான மாற்றங்களை நோக்கி நகரும், அரசியல் உறுதிமிக்க ஒரு தலைமுறையை முதலமைச்சர் விஜய் உருவாக்கி வருகிறார் என்ற உண்மையை யாராலும் மறுக்க முடியாது," எனத் தெரிவித்தார்.
மேலும், இளைய சமுதாயத்தினர் எதிர்மறை எண்ணங்களைத் தவிர்த்து, தெளிவான பாதையில் பயணிக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.