ஸ்பெயினில் இரு ரயில்கள் மோதி கோர விபத்து – 50 பேர் உயிரிழப்பு!
ஸ்பெயினில் இன்று காலை இரு ரயில்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் குறைந்தது 50 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.
மத்திய ஸ்பெயினில், தலைநகர் மட்ரிட்டுக்குத் தெற்கே அமைந்துள்ள டொலிடோ மாகாணத்தில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
மட்ரிட்டிலிருந்து சுமார் 40 மைல் தென்மேற்கில் அமைந்துள்ள டொலிடோ நகருக்கு அருகிலேயே இந்த விபத்து நிகழ்ந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. மட்ரிட் நகரையும் தென்மேற்குப் பகுதியில் அமைந்துள்ள செவில்லா நகரையும் இணைக்கும் ரயில் பாதையில் பயணித்த இரு ரயில்களே விபத்துக்குள்ளாகியுள்ளன.
இந்தச் சம்பவம் மிகவும் பாரதூரமானது என ஸ்பெயின் பிரதமர் தெரிவித்துள்ளார்.
ரயில்வே உட்கட்டமைப்பு நிர்வாக அமைப்பான ADIF வெளியிட்ட தகவலின்படி, மட்ரிட்டையும் செவில்லாவையும் இணைக்கும் ரயில் பாதையில் பயணித்தபோதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
இதனைத் தொடர்ந்து, மட்ரிட் பிராந்தியத்தையும் அண்டலூசியா பகுதியையும் இணைக்கும் அதிவேக ரயில் சேவை தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டில் ஸ்பெயினில் இடம்பெறும் மூன்றாவது பாரிய ரயில் விபத்து இதுவாகும்.
கடந்த ஜனவரி மாதம், தெற்கு ஸ்பெயினின் கோர்டோபா மாகாணத்தில் உள்ள அடாமுஸ் பகுதிக்கு அருகே இரு அதிவேக ரயில்கள் மோதியதில் 40க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
அந்தச் சம்பவம் இடம்பெற்ற சில நாட்களுக்குப் பின்னர், பார்சிலோனா நகருக்கு அருகிலும் பயணிகள் ரயில் ஒன்று தடம்புரண்டமை குறிப்பிடத்தக்கது.