லீசிங் நிறுவனங்கள் வாகனங்களைக் கைப்பற்ற முடியுமா? சட்ட நிலைமையை தெளிவுபடுத்துகிறது பொலிஸ்
லீசிங் (Finance Leasing) மற்றும் நிதி நிறுவனங்களால் வாகனங்கள் மற்றும் பிற உபகரணங்களைக் கைப்பற்றுவது தொடர்பில் பின்பற்றப்பட வேண்டிய சட்ட நடைமுறைகள் குறித்து இலங்கை பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். அத்துடன், வாகனங்களைக் கைப்பற்றும் நேரடி நடவடிக்கைகளில் பொலிஸ் உத்தியோகத்தர்கள் எவரும் பங்கேற்பதில்லை என்றும் பொலிஸ் ஊடகப் பிரிவு சுட்டிக்காட்டியுள்ளது.
2000 ஆம் ஆண்டின் 56 ஆம் இலக்க நிதி லீசிங் சட்டத்தின் (Finance Leasing Act No. 56 of 2000) கீழ், குத்தகைக்கு விடப்பட்ட வாகனங்கள் அல்லது சொத்துக்களை மீளப் பெறுவதற்கு லீசிங் நிறுவனங்களும் அவற்றின் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதிகளும் உரிய சட்ட நடைமுறைகளை மாத்திரமே பின்பற்ற வேண்டும். இது தொடர்பான சட்டப் பிரிவுகள் குறித்து அதிகாரப்பூர்வ பணிப்புரை சுற்றறிக்கைகள் மூலம் பொலிஸ் உத்தியோகத்தர்களுக்குத் தெளிவுபடுத்தப்பட்டுள்ளதாகப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
லீசிங் நிறுவனம் அல்லது அதன் அங்கீகரிக்கப்பட்ட பிரதிநிதி ஒருவர் முன்அறிவித்தல் வழங்கி, பொலிஸ் பாதுகாப்பைக் கோரும் பட்சத்தில், பொது அமைதியைப் பேணுவதற்காக மட்டுமே பொலிஸார் தலையிட முடியும். மாறாக, வாகனம் அல்லது ஏதேனும் உபகரணங்களைக் கைப்பற்றும் நடவடிக்கையில் நேரடியாகப் பங்கேற்க பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கு அதிகாரம் இல்லை.
லீசிங் பெறப்பட்ட சொத்தை மீளக் கைப்பற்றச் செல்லும்போது, வாடிக்கையாளர் தரப்பில் எந்தவொரு எதிர்ப்பும் இல்லாத சந்தர்ப்பத்தில் மட்டுமே லீசிங் நிறுவனத்தால் அதனை மீளப்பெற முடியும். ஒருவேளை வாடிக்கையாளர் எதிர்ப்புத் தெரிவித்தால், லீசிங் நிறுவனமானது நிதி லீசிங் சட்டத்திற்கு அமைவாகச் சம்பந்தப்பட்ட மாவட்ட நீதிமன்றத்தை அணுகி சட்டப் பூர்வமான தீர்வைப் பெற வேண்டும்.
இந்தச் சட்ட விதிகளுக்கு முரணாகச் செயல்படும் எந்தவொரு லீசிங் நிறுவனமும் அல்லது அதன் முகவரும் குற்றத்தைச் செய்வதாகவே கருதப்படுவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றாமல் வாகனங்கள் கைப்பற்றப்பட்டால், அது குறித்துப் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்ய முடியும். அவ்வாறு பெறப்படும் முறைப்பாடுகள் குறித்து விசாரணைகள் நடத்தப்பட்டு, கொள்ளை, திருட்டு அல்லது அத்துமீறல் போன்ற குற்றங்கள் உறுதிசெய்யப்பட்டால், அதற்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
மேலும், பொலிஸாரின் இத்தகைய தலையீட்டு அதிகாரமானது நிதி லீசிங் சட்டத்தின் கீழ் வரம்பிடப்பட்ட ஒப்பந்தங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்றும் பொலிஸார் தெளிவுபடுத்தியுள்ளனர். 1982 ஆம் ஆண்டின் 29 ஆம் இலக்க நுகர்வோர் கடன் சட்டத்தின் (Consumer Credit Act No. 29 of 1982) கீழ் வரவழைக்கப்படும் வாடகைக்கு வாங்கும் ஒப்பந்தங்களில் பொலிஸார் தலையிடுவதற்கு எவ்வித சட்டப் பிரிவுகளும் இல்லை என்று பொலிஸ் ஊடகப் பிரிவு குறிப்பிட்டுள்ளது.
எனவே, லீசிங் மற்றும் நிதி நிறுவனங்களுடன் செய்துகொண்ட ஒப்பந்தங்களின் விதிகளுக்கு அமைவாக அனைத்துத் தரப்பினரும் நடந்துகொள்ள வேண்டும் என்றும், நாட்டின் பொது அமைதியைப் பாதுகாக்க ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.