மீண்டும் களமிறங்கும் ‘சேனாதிபதி’: ‘இந்தியன் 3’ படத்தின் புதிய அறிவிப்பை வெளியிட்டது படக்குழு!
திரை உலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள ‘இந்தியன் 3’ திரைப்படத்தின் பணிகள் மீண்டும் துரிதப்படுத்தப்பட்டுள்ளதை தயாரிப்பு நிறுவனம் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.
பிரபல இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில், உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில் கடந்த 2024-ஆம் ஆண்டு 'இந்தியன் 2' திரைப்படம் திரைக்கு வந்தது. அந்தத் திரைப்படத்தின் இறுதிக்காட்சியில், கதையின் தொடர்ச்சியாக மூன்றாம் பாகத்தின் முன்னோட்டம் (Trailer) இணைக்கப்பட்டு ரசிகர்களுக்குக் காட்சிப்படுத்தப்பட்டிருந்தது.
இருப்பினும், 'இந்தியன் 2' திரைப்படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் பெரும் பின்னடைவைச் சந்தித்தது. அதனைத் தொடர்ந்து இயக்குநர் ஷங்கரின் இயக்கத்தில் வெளியான 'கேம் சேஞ்சர்' (Game Changer) திரைப்படமும் எதிர்பார்த்த வெற்றியைக் கொடுக்கத் தவறியதால், 'இந்தியன் 3' திரைப்படத்தின் வெளியீடு குறித்த ஐயப்பாடுகள் எழுந்தன.
அத்துடன், திரைப்படத்தின் இயக்குநருக்கும் தயாரிப்பு நிறுவனத்திற்கும் இடையே நிலவிய சில நிர்வாகச் சிக்கல்கள் காரணமாகவும் படப்பிடிப்புப் பணிகள் நீண்டகாலமாகத் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில், இத்திரைப்படம் குறித்த எவ்விதத் தகவல்களும் வெளியாகாமல் இருந்த சூழலுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், தயாரிப்பு நிறுவனமான லைகா புரொடக்ஷன்ஸ் (Lyca Productions) தனது உத்தியோகபூர்வ எக்ஸ் (X) தளப் பக்கத்தில் புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
அப்பதிவில், "எந்தவிதச் சமரசமும் இன்றி தனது லட்சியப் பாதையில் ‘சேனாதிபதி’ மீண்டும் களமிறங்குகிறார். ‘இந்தியன் 3: போர் முறை’ (Indian 3: War Mode) மூலம் அவரது அந்த மறுவருகை தொடங்குகிறது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்புடன் வெளியிடப்பட்டுள்ள விளம்பரப் சுவரொட்டியில் (Poster), மூன்று மாவீரர்கள் பரந்த வெளியில் வேகமாகக் குதிரைகளில் பயணிக்கும் போது எழும்பும் புழுதிப் படலம், மூன்று கோடுகளாகத் தோற்றமளிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கடந்த 1996-ஆம் ஆண்டு வெளியான 'இந்தியன்' முதல் பாகத்தின் மூலம் உலகளவில் பேரதிர்வை ஏற்படுத்திய ‘சேனாதிபதி’ எனும் கதாப்பாத்திரத்தின் தொடர்ச்சி, 2024-இல் இரண்டாம் பாகமாக உருவெடுத்தது. தற்போது அதன் இறுதிப் பகுதியாக 'இந்தியன் 3' உருவாகி வருகிறது.
லைகா புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் பிரம்மாண்ட தயாரிப்பில், அனிருத் இசையமைப்பில் மற்றும் ரவிவர்மனின் ஒளிப்பதிவில் இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.