மைசூரில் 'தர்மன்' படப்பிடிப்பு: ஆட்டோவில் வந்து ரசிகர்களை நெகிழ வைத்த ரஜினிகாந்த்!
நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் 'தர்மன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்திற்கு, அவர் சாதாரண ஆட்டோவில் வந்து இறங்கிய வீடியோ காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் தீயாகப் பரவி (viral) வருகிறது.
ராஜ்கமல் ஃபிலிம்ஸ் சர்வதேச நிறுவனத்தின் தயாரிப்பில், இயக்குநர் அஸ்வத் மாரிமுத்துவின் இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படமே 'தர்மன்'. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் மருத்துவர் கதாபாத்திரத்தில் நடிக்கின்றார். இப்படத்தின் முதற்கட்ட மற்றும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புகள் வெற்றிகரமாக நிறைவடைந்த நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பு தற்போது கர்நாடக மாநிலம் மைசூரில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது.
இந்நிலையில், படப்பிடிப்பு நடைபெற்று வரும் இடத்திற்கு நடிகர் ரஜினிகாந்த் மிகவும் எளிமையான முறையில் ஆட்டோ ஒன்றில் வந்து இறங்கியுள்ளார். பாரம்பரிய வேஷ்டி, சட்டை அணிந்து ஆட்டோவில் இருந்து இறங்கிய ரஜினிகாந்த், அங்கே தன்னைத் தரிசிக்க திரண்டிருந்த ரசிகர்களைப் பார்த்து இன்முகத்துடன் கையசைத்து தனது வணக்கத்தைத் தெரிவித்தார். இந்த அபூர்வக் காட்சி அடங்கிய காணொளி தற்போது இணையதளங்களில் வைரலாகி ரசிகர்களின் பேராதரவைப் பெற்று வருகின்றது.
மேலும், மைசூரில் அமைந்துள்ள உலகப் புகழ்பெற்ற சாமுண்டீஸ்வரி அம்மன் திருக்கோயிலுக்குச் சென்று, ரஜினிகாந்த் சிறப்பு வழிபாடுகளில் ஈடுபட்ட காணொளியும் சமூக வலைத்தளங்களில் பரவி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
இத் திரைப்படத்தில் ரஜினிகாந்துடன் இணைந்து நடிகைகள் சிம்ரன், ராஷி கண்ணா மற்றும் நகைச்சுவை நடிகர் யோகி பாபு உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்து வருகின்றனர். இத் திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் அனிருத் இசையமைக்கின்றார்.