‘ஓம்’ படத்தின் புதிய வெளியீட்டுத் தேதி அறிவிப்பு
திரையுலக ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நடிகர் தனுஷ் மற்றும் மலையாள முன்னணி நடிகர் மம்முட்டி இணைந்து நடித்துள்ள ‘ஓம்: சாப்டர் 1’ (Om: Chapter 1) திரைப்படம் வரும் நவம்பர் 20-ம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
‘ஒண்டர்பார் பிலிம்ஸ்’ (Wunderbar Films) மற்றும் ‘ஆர் டேக் ஸ்டூடியோஸ்’ (R Take Studios) ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படம், நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் 55-வது திரைப்படமாக உருவாகியுள்ளது. இப்படத்தை ‘அமரன்’ திரைப்படத்தின் இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ளார். எழிலரசு ஒளிப்பதிவு செய்ய, சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார்.
இப்படத்தில் தனுஷ் மற்றும் மம்முட்டியுடன் இணைந்து சாய் பல்லவி, ஸ்ரீலீலா, இந்திரன்ஸ் உள்ளிட்ட பிரபல நட்சத்திரங்கள் பலரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
முன்னதாக, இத்திரைப்படம் அக்டோபர் 16-ம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இருப்பினும், அக்டோபர் மாதத்தில் நடிகர் ரஜினிகாந்தின் ‘ஜெயிலர் 2’ (Jailer 2) திரைப்படமும், தீபாவளி பண்டிகையை முன்னிட்டு நடிகர் சூர்யாவின் ‘சீன்’ (Scene) திரைப்படமும் வெளியாகவிருந்ததால், ‘ஓம்’ திரைப்படத்தின் வெளியீடு ஒத்திவைக்கப்பட்டது.
இது குறித்து கருத்து தெரிவித்திருந்த தனுஷ், "திரைத்துறையின் நலனைக் கருத்திற் கொண்டும், பெருந்திரைப்படங்களின் ஆரோக்கியமான வணிகச் சூழலை உறுதி செய்யும் வகையிலும் இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தற்போது இத்திரைப்படத்தின் புதிய வெளியீட்டுத் தேதியை தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றான ‘ஆர் டேக் ஸ்டூடியோஸ்’ தனது சமூகவலைதளப் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. தனுஷ் மற்றும் மம்முட்டி துப்பாக்கிகளுடன் இருக்கும் புதிய போஸ்டரை (Poster) வெளியிட்டுள்ள தயாரிப்பு நிர்வாகம், இறுதித் தாக்குதலுக்கான நாள் நெருங்கிவிட்டதாகவும், வரும் நவம்பர் 20 அன்று திரைப்படம் உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாகும் என்றும் உறுதிப்படுத்தியுள்ளது.