எம்.ஜி.ஆரின் வாழ்க்கை வரலாறு ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ எனும் பெயரில் திரைப்படமாகிறது!
மறைந்த தமிழக முன்னாள் முதலமைச்சரும், முன்னணி நடிகருமான எம்.ஜி.ராமச்சந்திரனின் (M.G.R) வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு புதிய திரைப்படம் ஒன்று தயாரிக்கப்படவுள்ளது. ‘புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர்’ எனப் பெயரிடப்பட்டுள்ள இத்திரைப்படத்தில், எம்.ஜி.ஆரின் கதாபாத்திரத்தில் நடிகர் ஜெ.எம்.பஷீர் நடிக்கவுள்ளார். இவர் முன்னர் ‘தேசிய தலைவர்’ திரைப்படத்தில் பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தனது தனித்துவமான நடிப்புத் திறனாலும், மனிதநேயப் பணிகளாலும் கோடிக்கணக்கான மக்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் எம்.ஜி.ஆர். திரையுலகில் பெரும் சாதனை படைத்த அவர், பின்னர் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் (AIADMK) என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி, தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார். தனது ஆட்சிப் காலத்தில் பல்வேறு முன்னோடி சமூக நலத் திட்டங்களைச் செயல்படுத்தி, மக்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
திரையுலகம், அரசியல், மக்கள் சேவை எனப் பல்வேறு தளங்களில் முத்திரை பதித்த அவரது வாழ்க்கை வரலாறு, தலைமுறைகள் கடந்தும் இன்றளவும் பேசப்படும் ஒன்றாக விளங்கி வருகிறது.
இத்திரைப்படம் வெறும் வாழ்க்கை வரலாற்றை மட்டும் பதிவு செய்யாமல், எம்.ஜி.ஆருடன் நெருங்கிப் பழகியவர்கள், அவரது குடும்ப உறுப்பினர்கள், அரசியல் கட்சி நிர்வாகிகள், அவரது ஆட்சிக் காலத்தில் பணியாற்றிய அரச அதிகாரிகள் , சக நடிகர்-நடிகைகள் மற்றும் திரையுலகப் பிரபலங்கள் ஆகியோரின் நேரடி அனுபவங்களையும் நினைவுகளையும் அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்படவுள்ளது.
எம்.ஜி.ஆர் புதிய அரசியல் கட்சியைத் தொடங்கிய அக்டோபர் 17-ஆம் திகதியன்று (October 17), அவர் வாழ்ந்த சென்னை ராமாவரம் தோட்ட இல்லத்தில், முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு உத்தியோகபூர்வமாகத் தொடங்கவுள்ளது.
இத்திரைப்படத்தின் இயக்குநர், தயாரிப்பாளர், ஏனைய நடிகர்-நடிகைகள் உள்ளிட்ட படக்குழுவினர் தொடர்பான அதிகாரபூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியிடப்படும் எனத் தயாரிப்புத் தரப்பு அறிவித்துள்ளது.