சஷி வீரவன்சவுக்கு இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை – மேன்முறையீட்டை நிராகரித்தது உயர் நீதிமன்றம்
முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவின் மனைவி சஷி வீரவன்சவுக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை உயர் நீதிமன்றம் இன்று (18) உறுதிப்படுத்தியுள்ளது.
சட்டவிரோதமான முறையில் பெற்றுக்கொண்ட இராஜதந்திர கடவுச்சீட்டை வைத்திருந்த குற்றச்சாட்டில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக அவர் தாக்கல் செய்த மேன்முறையீட்டை உயர் நீதிமன்றம் நிராகரித்துள்ளது.
பிரதம நீதியரசர் பிரீத்தி பத்மன் சூரசேன தலைமையிலான மூன்று நீதியரசர்கள் அடங்கிய அமர்வு இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது.
மேன்முறையீடு நிராகரிக்கப்பட்டதைத் தொடர்ந்து, திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்த சஷி வீரவன்சவை உடனடியாக விளக்கமறியலில் வைக்குமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டது.
அத்துடன், அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையை நடைமுறைப்படுத்துவதற்காக கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்த வழக்கில், கடந்த 2022ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் திகதி கொழும்பு நீதவான் நீதிமன்றம் சஷி வீரவன்ச குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனையும் ஒரு இலட்சம் ரூபாய் அபராதமும் விதித்திருந்தது.
இதனை எதிர்த்து அவர் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மேன்முறையீடு, 2026ஆம் ஆண்டு ஜூன் மாதம் 11ஆம் திகதி நிராகரிக்கப்பட்டதுடன், முன்னர் வழங்கப்பட்ட தண்டனையும் உறுதிப்படுத்தப்பட்டது.
இதனையடுத்து, அந்தத் தீர்ப்பை சவாலுக்கு உட்படுத்தி அவர் உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், உயர் நீதிமன்றமும் அவரது மேன்முறையீட்டை நிராகரித்துள்ளதால், அவருக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை தற்போது உறுதியாகியுள்ளது.