ராஜாங்கனை சத்தரதன தேரர் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில்
அனுராதபுரம் ருவன்வெலிசாய தூபிக்கு அருகில் சத்தியாக்கிரகப் போராட்டம் இடம்பெற்ற பகுதியில் ஏற்பட்ட அமைதியின்மை சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட, பௌத்த பிக்குகள் சாசனத்திலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனை சத்தரதன தேரர், எதிர்வரும் நவம்பர் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக இன்று (18) அனுராதபுரம் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட அவர், அங்கு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர் கைது செய்யப்பட்டார்.
கடந்த நவம்பர் 12ஆம் திகதி அனுராதபுரம் புனித நகரப் பகுதியில், வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட சிலர் முன்னெடுத்திருந்த சாகும் வரையிலான உண்ணாவிரதப் போராட்டம் இடம்பெற்ற இடத்திலேயே இந்த அமைதியின்மை சம்பவம் ஏற்பட்டது.
ராஜாங்கனை சத்தரதன தேரர் தலைமையிலான குழுவினர் போராட்டம் இடம்பெற்ற இடத்திற்கு வருகை தந்து, போராட்டக்காரர்களுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டதைத் தொடர்ந்து இரு தரப்பினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது.
இதன்போது தலையில் காயமடைந்த ராஜாங்கனை சத்தரதன தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார், வணக்கத்திற்குரிய பலாங்கொடை கஸ்ஸப தேரர் உள்ளிட்ட பலரைக் கைது செய்திருந்தமை குறிப்பிடத்தக்கது.