11 வயது சிறுவனை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு: பௌத்த பிக்குவின் 14 ஆண்டு சிறைத்தண்டனை உறுதி
அம்பாறை மாவட்டத்திலுள்ள விகாரை ஒன்றில் 11 வயது சிறுவனைப் பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட பௌத்த பிக்குவுக்கு விதிக்கப்பட்ட 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை மேன்முறையீட்டு நீதிமன்றம் உறுதி செய்துள்ளது.
எத்பிட்டியே சந்திரானந்த ஹிமி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனுவை நிராகரித்து, நீதியரசர்களான பி. குமாரரத்னம் மற்றும் ஆர்.பி. ஹெட்டியாராச்சி ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் குழாம் கடந்த நவம்பர் 17ஆம் திகதி இந்தத் தீர்ப்பை வழங்கியது.
நீதிமன்ற ஆவணங்களின்படி, பாதிக்கப்பட்ட சிறுவன் தனது பெற்றோருடன் சிவ்மினிசேய விகாரைக்குச் சென்றிருந்தபோது, அங்கிருந்த தலைமைப் பிக்கு சிறுவர்களை பௌத்த துறவறத்தில் இணைவதற்கு அழைப்பு விடுத்துள்ளார்.
இதனையடுத்து குறித்த சிறுவன் துறவறத்தில் இணைந்து, விகாரையில் தங்கியிருந்துள்ளார். இதன்போது, 2014ஆம் ஆண்டில் சுமார் 10 மாதங்கள் தொடர்ச்சியாக அவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.
விகாரையில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் செய்த முறைப்பாட்டைத் தொடர்ந்து இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
வழக்கு விசாரணையின்போது சாட்சியமளித்த பாதிக்கப்பட்ட சிறுவன், அப்போது 19 வயதுடையவராக இருந்ததுடன், குறித்த பிக்குவின் பராமரிப்பில் இருந்த காலத்தில் தனக்கு நேர்ந்த துஷ்பிரயோகங்கள் தொடர்பில் நீதிமன்றத்தில் சாட்சியமளித்துள்ளார். மருத்துவ அறிக்கைகளும் குற்றச்சாட்டுகளுக்கு ஆதரவாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன.
இதனையடுத்து, அம்பாறை மேல் நீதிமன்றம் குறித்த பிக்குவை பாரதூரமான பாலியல் துஷ்பிரயோகக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக அறிவித்து, 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதித்திருந்தது.
மேலும், 40,000 ரூபாய் அபராதமும், பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு 500,000 ரூபாய் இழப்பீடு வழங்குமாறும் உத்தரவிட்டிருந்தது.
எனினும், வழக்குத் தொடுப்புத் தரப்பு குற்றச்சாட்டுகளை சந்தேகத்திற்கு இடமின்றி நிரூபிக்கத் தவறியதாகவும், தமது தரப்பு சாட்சியங்கள் முறையாகக் கவனத்தில் கொள்ளப்படவில்லை என்றும், தண்டனை அதிகப்படியானது என்றும் தெரிவித்து குறித்த பிக்கு மேன்முறையீடு செய்திருந்தார்.
ஆனால், விசாரணை நீதிபதி சாட்சியங்களை முறையாக மதிப்பீடு செய்துள்ளதாகக் குறிப்பிட்ட மேன்முறையீட்டு நீதிமன்றம், பிக்கு சிறுவனின் நம்பிக்கைக்கும் பாதுகாப்புக்கும் பொறுப்பான அதிகார நிலையில் இருந்துகொண்டு அந்த நிலையைத் தவறாகப் பயன்படுத்தியுள்ளதாகச் சுட்டிக்காட்டியது.
அத்துடன், பாதிக்கப்பட்ட சிறுவன் முக்கிய முரண்பாடுகள் இன்றி உறுதியான சாட்சியங்களை வழங்கியுள்ளதாகவும் நீதிமன்றம் தெரிவித்தது.
இதனடிப்படையில், பிக்குவின் மேன்முறையீட்டு மனுவை நிராகரித்த நீதிமன்றம், 14 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனையை உறுதி செய்ததுடன், அந்தத் தண்டனையை 2026 ஜனவரி 16ஆம் திகதி முதல் கணக்கிடுமாறும் உத்தரவிட்டுள்ளது.